Hot News
Home » செய்திகள் » மீண்டுமொரு வரலாற்றுத்தவறையும் துரோகத்தையும் செய்திருக்கும் முஸ்லீம் காங்கிரஸ்!

மீண்டுமொரு வரலாற்றுத்தவறையும் துரோகத்தையும் செய்திருக்கும் முஸ்லீம் காங்கிரஸ்!

வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கடந்த அறுபது ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் காலடி வைத்திருக்கும் இத்தருணத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறையும் துரோகத்தையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செய்திருக்கிறது.

தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் முஸ்லீம் காங்கிரஸின் இந்த முடிவினை முஸ்லீம் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விமர்சித்துள்ளதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லீம் காங்கிரஸ் அக்கறையின்றி செயற்பட்டு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு துரோகத்தை செய்யப்போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழர்களின் துக்கவீட்டில் (இறந்த வீட்டில்) கலந்து கொள்வதை விட மகிந்த ராஜபக்சவின் கல்யாண வீட்டில் கலந்துகொண்டு விருந்துண்டு மகிழ்வதிலேயே முஸ்லீம் காங்கிரஸ் அக்கறை கொண்டு செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

அவலப்பட்ட, துன்பப்பட்ட தமிழர்களும், முஸ்லீம்களும் ஒரே நிலத்தில் ஒரே பெறும்பான்மையினத்தின் அடக்குமுறைகளில் இருந்து விடுபடுவதற்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் இரு சிறுபான்மை தேசிய இனங்கள். இந்நிலையில் அவலங்களையும், துன்பங்களையும் பெறுட்படுத்தாது அடக்குமுறையாளர்களின் காலடியில் வீழ்ந்து போராடிக்கொண்டிருக்கும் தமிழினத்தை பலவீனப்படுத்துவதையும் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதையும் எந்த மானமுள்ள தனித்துவமுள்ள இனமும் ஏற்றுக்கொள்ளாது.

பள்ளிவாசல்களையும், காணிகளையும் அபகரிக்கும் அரசாங்கத்துடன் இன்று உறவாடிப் பெறக்கூடிய ஒன்று பணம் மட்டும்தான் என்பதே உண்மை எனவே எத்தனையோ ஆண்டுகள் பொறுத்திருந்த முஸ்லீம் காங்கிரஸிக்கு இன்னும் கொஞ்சநாட்களுக்கு காத்திருக்கமுடியாமல் போனது வேதனையான விடயமே.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைமைக்கு முதலமைச்சர் பதவி தான் தேவை என்றால் அதற்காக வடக்கு கிழக்கு தமிழ் தேசிய இனத்தின் வரலாற்று தாயகத்தில் சிங்கள பேரினவாத தலைமை ஆட்சி அமைப்பதற்கு துணை போவது ஒட்டுமொத்த மானமுள்ள தமிழ் முஸ்லீம் இனத்திற்கு செய்யும் வரலாற்று துரோகமாகும்.

தமிழர்களை பொறுத்தமட்டில் முஸ்லீம்கள் தங்களது இனத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்திருப்பதில் எந்தத்தவறும் இல்லை. ஆனால் சிறுபான்மையின மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ், முஸ்லீம் கட்சிகளின் கூட்டும் அதன் பின்னரான செயற்பாடுகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லீம்களையும் சமதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் முஸ்லீம் தரப்பை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் அந்த காலம்வரை தமிழர்களின் போராட்டத்திற்கு முஸ்லீம் மக்கள் உதவினார்களா? என்றால் இல்லையென்றே கூறலாம்.

சரி உதவாவிட்டாலும் ஒதுங்கியிருந்தார்களா? என்றால் அதுவும் இல்லை அவர்கள் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக என்ன செய்தார்கள் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிவார்கள்.  சரி அப்போதுதான் விடுதலைப்புலிகள் தவறுவிட்டார்கள் என்ற முஸ்லீம்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டாலும் இன்று யார் தவறு விடுகிறார்கள்? அன்று விடுதலைப்புலிகள் தவறுவிட்டார்கள் அதனால் தமிழர்களின் போராட்டத்திற்கு அதரவு வழங்கவில்லை, தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடமுடியவில்லை என்று கூறும் முஸ்லீம் தலைமைகள் இன்று அதே தவறை மீண்டும் செய்வதற்கு என்ன காரணத்தை முன்வைக்கப்போகின்றார்கள்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறுபான்மையின தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுவிடயத்தில் முஸ்லீம் காங்கிரசை இணைந்து செயற்படுமாறு பல தடவைகள் அழைப்பு விடுத்தும் அதனைப் புறக்கணித்து செயற்படும் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சு பதவிகளை தக்க வைப்பதிலேயே குறியாகவுள்ளனர்.

குறிப்பாக தமிழ், முஸ்லீம் மக்களின் கோட்டையாக கருதப்படும் கிழக்குமாகாணத்தை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஊடாக தென்னிலங்கை அரசாங்க கட்சிகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கு முனைப்புக்காட்டி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

நிரந்தரமில்லாத அரசியல் பதிவிகளுக்காக பல ஆண்டுகளாக அவலங்களைச் சுமந்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு எதிராக முஸ்லீம் காங்கிரஸ் செயற்படுவதை எப்படி தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்?; கடைசிவரை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் நாளை சர்வதேசத்தின் ஆதரவுடன் ஏதோ ஒரு தீர்வை வடகிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வரும்போது மட்டும் அதில் எங்களையும் சமதரப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள், தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற கோரிக்கையினை முன்வைப்பது எந்தவகையில் நியாயமானது?

அந்த கோரிக்கைகள் நியாயமானது என்றாலும் அதனை முஸ்லீம் காங்கிரஸ் எந்தவித சூடு, சோரணையற்று எவ்வாறு கேட்கும்? எனவே காலத்தின் தேவையறிந்து இனத்தின் அவலமறிந்து சிறுபான்மையின கட்சிகள் செயற்படவேண்டும் என்பதே இன்றைய கட்டாயத் தேவையாகவுள்ளது.

சிறுபான்மையின மக்களை பொறுத்தமட்டில் வடகிழக்கு அரசியல் தீர்வு விடயத்தில் ஒருங்கிணைந்த ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பயணித்தால் மட்டுமே நிரந்தர அரசியல் தீர்வைப்பெற்றுக்கொள்ளலாம் அதை விடுத்து முஸ்லீம் தலமைகளும், முஸ்லீம் சமூகமும் இந்த விடயத்தில் தவறு விடுமாகவிருந்தால் நாளை தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தனியான அங்கிகாரம் பெற்ற அரசியல் அதிகாரத்தில் முஸ்லீம்கள் இரண்டாம் தரப்பாக மாற்றப்படுவதற்கான சகல நியாயப்பாடுகளையும் உருவாக்குவதாக அமைந்துவிடும்.

எனவே முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லீம் அரசியல் தலைமைகளும், முஸ்லீம் மத தலைவர்களும், முஸ்லீம் சமூகத் தலைவர்களும் தமிழர்களின் போராட்ட நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கான பாதையை உருவாக்கும்.

Author: TELO Admin