Hot News
Home » செய்திகள் » தமிழர்களுக்கு சுடுகாடு நிச்சயம்: சம்பிக்க ரணவக்க – பிணம் எரிக்கும் பொறுப்பை சம்பிக்க பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளாரா? -வேலாயுதம்

தமிழர்களுக்கு சுடுகாடு நிச்சயம்: சம்பிக்க ரணவக்க – பிணம் எரிக்கும் பொறுப்பை சம்பிக்க பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளாரா? -வேலாயுதம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீரும், இரத்தமும், சுடுகாடும் நிச்சயம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எனவே வடக்கு மக்கள் வீணாக பிரிவினைவாதிகளுக்கு துணை போய் அழிவை தேடிக் கொள்ளக்கூடாது எனவும் அவர் கூறினார்.

பிரபாகரனை நம்பி அழிவைத் தேடிக்கொண்டது போல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத அரசியல் ஊடாக வடக்கு மக்கள் மீண்டும் அழிவை தேடிக் கொள்ளக்கூடாது.

வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலம் அந்த மாகாண மக்களின் கைகளில் தங்கியுள்ளது.

மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கும் கட்சி என்ற வகையில் ஜாதிக ஹெல உறுமய வடக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்கின்றது.

விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை யாழ் குடா உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியமர்த்தாது தேர்தல் நடத்தப்படுதை நாம் எதிர்க்கின்றோம்.

13வது திருத்தச் சட்டத்தில் பிரிவினைவாத அதிகாரங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு உரிய பதிலை வழங்க வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டம் நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலாகும்.

இந்தியாவின் தமிழீழ கனவு இலங்கையில் ஒரு போதும் நிறைவேறாது.

இந்தியா கபட நோக்கத்துடன் இலங்கையில் தனி தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக மாகாணசபை முறையை அறிமுகம் செய்ததுடன் அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும் உள்ளடக்கியது.

அன்று முதல் இன்று வரை நாடு பெரும் இனவாத போராட்டத்தை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில், வட மாகாண சபை தேர்தலின் ஊடாக தமிழீழக் கனவை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என்றார்.

இந்தநிலையில் விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆனால் தமிழருக்கு கண்ணீரும் சுடுகாடும் உறுதியாகும் என்றால், சம்பிக்க ரணவக்க, பிணம் எரிக்கும் பொறுப்பை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளாரா என ஐக்கிய தேசிய கட்சியின் ஊவாமாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்னேஸ்வரன் முதலமைசச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீரும் இரத்தமும் சுடுகாடும் நிச்சயம் என சம்பிக்க ரணவக்கவின் கருத்து தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கே.வேலாயுதம் இதனை கூறியுள்ளார்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது நடத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாய்கிழிய வீராப்பு பேசிய சம்பிக்க இந்திய வெளியுறவு ஆலோசகர் சிவசங்கர் மேனனது வருகையின் பின்னர் வாயடைத்து வெட்கமற்று இருக்கின்ற நிலைமையை நாட்டு மக்கள் அறிவார்கள்.

இனவாதத்தின் ஊடாக தமிழ் மக்களை அச்சுறுத்தி வட மாகாணத்தையும் அபகரிக்கும் செயற்பாட்டில் சம்பிக்க இறங்கியிருப்பது பேரினவாதத்தினூடாக இந்தநாட்டின் சமாதானத்தை சீர்குலைத்து நாட்டை பிளவுபடுத்த தூண்டுகின்ற பிரிவினைவாத செயலாகவே கருதுகின்றோம்.

எனவே வடக்கை ஏற்கனவே அவர் சார்ந்த அரசாங்கம் சுடுகாடாக்கி இருப்பது உலகே அறிந்த விடயம். இவ்விடயம் சம்பந்தமாக உலக நாடுகள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது அரசு திண்டாடிக் கொண்டிருப்பதையும் உலகம் அறியும்.

இந்நிலையில் மீண்டும் ஜனநாயக ரீதியில் தமிழ் மக்கள் வடக்கு தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்ற செயலை கொச்சைப்படுத்தி தமிழ் மக்களை அச்சுறுத்தி வடக்குத் தேர்தலில் பேரினவாத சக்திகள் வெற்றிபெற முடியாது.

இதனை தமிழ் மக்கள் நிச்சயம் பரைசாற்றுவார்கள் என்பதோடு எதிர்காலத்தில் நாட்டை சுடுகாடாக்குகின்ற நிலையினை பேரினவாத சக்திகள் முன்னெடுக்குமானால், அங்கு பிணம் எரிக்கின்ற வேலை சம்பிக்கவுக்கு கிடைப்பது உறுதி என்பதை கூற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Author: TELO Media Team 1