Hot News
Home » செய்திகள் » மாகாண சபை தேர்தல்கள் 21 ஆம் திகதி

மாகாண சபை தேர்தல்கள் 21 ஆம் திகதி

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்காக இந்த முறை 19 அரசியல் கட்சிகள் மற்றும் 75 சுயாதீனக்குழுக்களில் இருந்து 3785 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஜே வி பி, ஜனநாயக தேசிய முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனசேனபெரமுன, உள்ளிட்ட பிரதான கட்சிகள் இந்த முறை தேர்தல்களில் போட்டியிடுகின்றன.

வடக்கு மாகாண சபைத் தேர்தல்களின் பொருட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 11 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அபேஜாதிக பெரமுன மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணி என்பவற்றின் வேட்பு மனுக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திற்காக 11 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயாதீன குழுக்கள் முன்வைத்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும், 8 சுயாதீனக்குழுக்களும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மூன்று சுயாதீனக் குழுக்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்காக வேட்பு மனுக்களை சமர்ப்பித்த போதும், இரண்டு மனுக்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வவுனியா மாவட்டத்திற்காக 12 அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளன.

8 சுயாதீன குழுக்கள் வவுனியாவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த போதும், அவற்றில் 1 நிராகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபை தேர்தல்களுக்காக கண்டி மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள் மற்றும் நான்கு சுயாதீன குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் 10 சுயாதீனக்குழுக்கள் வேட்பு மனுக்களை செலுத்திய போதும், ஒரு சுயதீன குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபைக்கான தேர்தல்கள் தொடர்பில், புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த போதும், ஒரு கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபிவிருத்தி முன்னணி தாக்கல் செய்த மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மேலாக 11 சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

குருநாகலை மாவட்டத்திற்காக 16 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், அவற்றில் இரண்டு கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய அபிவிரு மற்றும் புதிய ஜனநாயக முன்னணி என்பவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிகரிக்கப்பட்டன.

13 சுயதீன குழுக்கள் அங்கு மனுக்களை தாக்கல் செய்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி, ஜே வி பி மற்றும் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக கட்சி மற்றும் ஜனசெத பெரமுன என்பன தேர்தல்கள் நடைபெறவுள்ள பத்து மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைக்காக மாத்திரம் போட்டியிடவுள்ளதுடன், அதன் ஐந்து மாவட்டங்களிலும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த முறை தேர்தல்களுக்காக வாக்களிப்பதற்கு 43 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மூன்று மாகாணங்களுக்காகவும் 142 மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Author: TELO Media Team 1