Hot News
Home » செய்திகள் » என்னைக் கோபப்படுத்தாதீர்கள்

என்னைக் கோபப்படுத்தாதீர்கள்

இது என்னால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் தானே. நீங்கள் என்னை கோபப்படுத்தாதீர்கள். இதனை ஊடக கண்காட்சியாக்குவதே உங்களது எதிர்பார்ப்பு. இத்தோடு முடித்துக்கொள்வோம். இதனை பெற்றவர்களும் எதிர்காலத்தில் குற்றவாளியாகலாம்; இவ்வாறு சினத்துடன் தெரிவித்துள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

கடந்த அரச தலைவர் தேர்தல் காலத்தில் சில் துணிகளை அரச நிதியில் வழங்கிய விவகாரத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று சிறைக்குச் சென்று சந்தித்தார்.

அதன்பின்னர் ஊடகங்களுகளின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு சினத்துடன் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குற்றமில்லை. இதுவொரு குற்றம் என்பதை உருவாக்கப்பார்க்கின்றனர். எமது நாட்டில் இதுவொரு சம்பவமல்ல. 10 அல்லது 8 விடயங்களுக்கான உத்தரவுகளை எழுதி அவர்களுக்கு வழங்கியதோடு அதற்கான நிதியையும் வழங்கியிருந்தேன். இது மக்களிடம் இருந்து கிடைத்த கேள்வியாகும். இந்த எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கி நடவடிக்கை எடுத்தோம். மாறாக தேர்தலுக்காக எடுத்த முடிவல்ல.

இது எனது உத்தரவு. ஆனால் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. ஆனாலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளனர். மேன்முறையீடு செய்ய எமக்கு உரிமையிருக்கிறது. இதில் எவருக்கும் தர்க்கம் செய்வதற்கான சட்டச்சிக்கல்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Author: TELOMedia