Hot News
Home » செய்திகள் » 20வது திருத்தத்தில் கூட்டமைப்பின் யோசனைகள் ஏற்பு

20வது திருத்தத்தில் கூட்டமைப்பின் யோசனைகள் ஏற்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் யாழ். அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20வது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டமையினால் மக்களுக்கும், மாகாணசபைகளுக்கும் போதிய தெளிவில்லாமல் போயுள்ளதென்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இச் சட்டமூலத்தை பெரும்பாலான மாகாண சபைகள் நிராகரித்துள்ள நிலையில், அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. குறித்த திருத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் இதன்போது தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, மாகாணசபைகள் ஐந்து வருடங்களுக்கு முன் கலைக்கப்பட்டால் எஞ்சிய காலத்தை நாடாளுமன்றம் பொறுப்பேற்பதை கூட்டமைப்பு எதிர்த்தது. அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் தீர்மானத்தையும் நாடாளுமன்றமே எடுக்குமென்பதையும் கூட்டமைப்பு எதிர்த்தது. இந்நிலையில், தற்போதைய திருத்தங்களின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்குமென சுமந்திரன் குறிப்பிட்டார். அத்தோடு, ஐந்து வருடங்களுக்கு முன் மாகாணசபை கலைக்கப்பட்டால் அதன் அதிகாரங்களை நாடாளுமன்றம் பொறுப்பேற்காது, இடைக்கால தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதால் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தாலும், பெரும்பாலான மாகாண சபைகள் அதனை எதிர்த்தன. குறிப்பாக வடக்கு மாகாண சபை தற்போதைக்கு அதனை நிராகரிப்பதாகவும் திருத்தங்களை முன்வைத்தால் பரிசீலிக்க தயாரென்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும், கிழக்கு மாகாண சபை இத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: TELOMedia