Hot News
Home » செய்திகள் » யுத்தக் குற்றம் குறித்த சரத் பொன்சேகாவின் கூற்றை சாதாரண விடயமாக கருதக்கூடாது

யுத்தக் குற்றம் குறித்த சரத் பொன்சேகாவின் கூற்றை சாதாரண விடயமாக கருதக்கூடாது

முன்னாள் இராணுவ தளபதி மற்றும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா யுத்தக் குற்றம் குறித்து பகிரங்கமாக கூறியதையிட்டு தமிழ் மக்கள் சந்தோசம் அடைந்துள்ளனர். இந்த குற்றச்சாட்டினை சாதாரண விஷயமாகவோ அல்லது நகைச்சுவை சார்ந்த விடயமாகவோ எடுக்க முடியாது.

எனவே, நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாயின் போர்குற்ற விசாரணையை சர்வதேச ரீதியில் நடத்தி குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் அதன் மூலம் நீதி வழங்க வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிதிச் செயலருமான விந்தன் கனகட்ணம் விந்தன் கூறினார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா முன்னாள் இராணுவ தளபதியும் பிரேசில் நாட்டு தூதுவருமாக இருந்த ஜகத் ஜெயசூரிய போர்குற்றம் புரிந்தார் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அதை ஜகத் ஜெயசூரிய மறுத்திருந்தார். இதற்கு ஆதாரமாக இன்று தேசிய அரசு பக்கங்களிலிருந்து பல குரல்கள் எழும்பியுள்ளன.

ஆனால் உண்மை ஒன்றை சரத் பொன்சேகா பகிரங்கமாக கூறியதையிட்டு தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னாள் இராணுவத்தளபதியால் பகிரங்கமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது சாதாரண விடயமாகவோ அல்லது நகைச்சுவையோ சுவை சார்ந்த விடயமாகவோ எடுக்கக் கூடாது.

இவ் உண்மையான விடயத்தை வடக்கு கிழக்கு மக்கள் உட்பட புலம் பெயர் மக்களும் வரவேற்கும் அதே வேளை இப் போர்க்குற்றங்களுக்கு பின்னால் வெறுமனே ஜகத் ஜெயசூரிய மட்டுமல்ல சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, பிரசன்ன சில்வா, இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் முப்படைகளின் தளபதியுமான முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷா அவர்களது பங்காளிகளாக இருந்துள்ளனர் என்பதே உண்மை.

ஆனால், இப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பகைமை காரணமாக மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டலாம் செய்த குற்றங்கள் பகிரங்கப்படுத்தலாம். ஆனால், அவர்கள் உண்மை ஒன்றை வெளிப்படையாக கூறியுள்ளனர் என்பது தெளிவாக உள்ளது. ஏனென்றால் போர்குற்றங்கள் பல சந்தர்ப்பங்களில் நிரூபணம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

ஐநா அறிக்கையிலும் ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் அறிக்கை யிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பரணவிதாரண அறிக்கையிலும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் இலங்கை மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையிலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என பல விசாரணைகளில் கண்டுபிடித்து சாட்சியங்களும் ஆவணமாக சமர்ப்பித்திருக்கின்ற சூழலில் இதுவரை காலமும் மாறிமாறி ஆட்சி அமைத்த அரசாங்கங்களும் இராணுவ அதிகாரிகளும் சரி இந்த போர்குற்றத்தை மறுத்து வந்த நிலையில் முதற் தடவையாக ஒரு முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா அதை பகிரங்கமாக கூறிக்கொண்டார்.

குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் சர்வதேசத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். உள்ளக விசாரணைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. கொலையாளிகளே நீதிபதிகளாக மாறி மாறி நீதி விசாரணை செய்வது ஒரு நகைப்புக்குரிய நடவடிக்கை, எனவே சர்வதேச பொறிமுறக்கூடாக சர்வதேச நீதிபதிகள், சர்வதேச சட்டவாதிகள் மற்றும் உள்ளக நீதிபதிகள் சட்டவாளர்ங்கள் உள்ளடக்கிய ஒரு விசாரணையை மேற்கொண்டு தீர்வு வழங்கப்பட வேண்டும். இலங்கையிடம் இத்தகைய விசாரணைகள் ஒப்படைக்கப்படக்கூடாது.

அவ்வாறு நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது போர்க்குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டே இருப்பார்கள். காலங்கள் கடந்துகொண்டு போகும். எனவே முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் வாக்குமூலத்தை வைத்து போர்குற்ற விசாரணை மேட்கோள்ளப்பட வேண்டும்.

அது மட்டுமில்லி சேனல் – 4 வெளியிட்ட காட்சிகள் போன்றவை ஏற்கனவே ஆதாரமாக உள்ளன. எனவே, நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாயின் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச ரீதியில் நடத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்கிறார்.