Hot News
Home » செய்திகள் » அரச சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதாது

அரச சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதாது

இலங்கையின் அரச சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய அளவில் காணப்பட்ட போதிலும், அரசியலிலும் சட்டவாக்கத்துறையிலும், பெண்களின் பிரதிநித்துவம் போதுமானதாக இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“பெண்களுக்கு அதிகாரம் – நாட்டுக்கு மாற்றம்” எனும் தொனிப்பொருளில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான தெளிவுபடுத்தல் செயற்றிட்டம், ஜனாதிபதி தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான சட்டங்களை, தற்போதைய அரசாங்கம் உருவாக்கிச் செயற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை, பெண்கள் வேறுபட்ட கோணத்தில் அணுகுகின்றனரெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பெண்களின் முக்கியத்துவத்தை, தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் சகல துறைகளிலும், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகளவிலோ அல்லது சமமான அளவிலோ காணப்படுவதனையும், ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வின் போது, மேற்குறித்த செயற்றிட்டத்துக்கான இலச்சினையை அறிமுகம் செய்தலும், பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து வைத்தலும் இடம்பெற்றது. அதேபோன்று, இச்செயற்றிட்டத்தின் அறிக்கையும் கையெழுத்து ஆவணமும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவால், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.