Hot News
Home » செய்திகள் » சுபீட்சம் உதயமாவதற்கு தைப்பொங்கல் வழிவகுக்கட்டும்

சுபீட்சம் உதயமாவதற்கு தைப்பொங்கல் வழிவகுக்கட்டும்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை மாதம். தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் இன்றைய நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு உண்ணும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையானது இலங்கை, இந்தியாவின் தமிழ்நாடு, மலேசியா, கனடா, சிங்கப்பூர், மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறை ஆகும்.

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்தப் பண்டிகை என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது.

சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை மொத்தம் 3 நாட்களுக்குக் கொண்டாடுகின்றனர். முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல்.மக்களுக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்வாய்ப்பாக இந்த தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டுக் கொளுத்துவார்கள். கெட்டவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

2ஆவது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.

3வது நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும்.

ஆண்டெல்லாம் மனிதனுக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தின் போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர நான்காவது நாள் காணும் பொங்கலாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுது போக்கு மிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின் போதுதான் அதிக கிராக்கி. அன்று முழுவதும் கரும்பு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
தமிழர்களின் திருநாளாக, உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை அனைவரும் இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். அதேசமயம், பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவலங்கள் ஒழிந்து, புதியஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் பிரார்த்திப்போம்.

இன்றைஉஅ தினம் சுபிட்சத்துக்கான ஆரம்பமாக இருக்கட்டும்!

Author: TELOMedia