Hot News
Home » செய்திகள் » 2018 தைப்பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடிய வேண்டும்

2018 தைப்பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடிய வேண்டும்

தைப்பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடியட்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மலர்ந்துள்ள தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வாழ்த்துச் செய்தியில், ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து இருந்துவரும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தின் வழியே, 2018 தைப்பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடிய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உலகத் தமிழர் உள்ளமெங்கும் விதைத்து தமிழ்ப் புத்தாண்டை வருக வருக என வரவேற்பதோடு அனைவருக்கும் தைப் பொங்கல் நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் பேருவகை கொள்கிறேன்.

விடைபெற்றுச் செல்லும் ஆண்டோடு தமிழர்களாகிய நாம் அனுபவித்து வரும் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் என யாவும் எம்மை விட்டகன்று, புலர்கின்ற புதிய ஆண்டில், சுதந்திரமான, சுபீட்சமான நல்வாழ்வு மலரட்டும் என்ற எதிர்ப்பார்ப்புடனும் நற்சிந்தனையுடனும் அடியெடுத்து வைப்போம்.

“விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்து எடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வழியே எமது மண்ணினதும், மக்களினதும், விடிவிற்காய் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சாத்வீகமான முறையில் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என இன்றைய நாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Author: TELOMedia