Hot News
Home » செய்திகள் » வடமாகாணசபைத் தேர்தலை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கே.என்.விந்தன்

வடமாகாணசபைத் தேர்தலை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கே.என்.விந்தன்

எமது மக்கள் தேர்தல்கள் வாயிலாகவே தமது அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டியுள்ள நிலையில், வடமாகாணசபைத் தேர்தலையும் சரியாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக யாழ். மாநகரசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளருமான கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். வேலணையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், எமது மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடினார்கள். அதன்பின்னர் ஆயுதவழியில் போராடினார்கள். இப்போராட்டங்களில் அகிம்சை வழியிலான போராட்டங்கள் சகலதும் ஏற்றுக்கொள்ளப்படாமல் அரச வன்முறை கொண்டு அடக்கப்பட்டதன் விளைவாக ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்படியாக இனத்தின் அரசியல் உரிமைகளுக்கான ஆயுத வழிப் போராட்டமும் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நீதி நியாயங்களுக்குப் புறம்பாக கொன்றழிக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.இப்படியானதோர் சந்தர்ப்பத்தில் நாம் மீள்வதற்குத் துடிக்கின்றோம். அவ்வாறாக மீள்வதற்கான சந்தர்ப்பங்களைத் தேடுகின்றோம். இவ்வாறு தேடுகையில் எமது அரசியல் பலம் என்று இன்று ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் ஓர் வாக்குப் பலம் இருக்கின்றது. இந்த வாக்குப் பலத்தினைக் கொண்டு ஜனநாயக வழியில் போராடுவதற்கு நாம் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமின்றி செயற்பட வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் நீங்கள் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் மிகப் பெறுமதியுடையனவாக இருக்கின்றது. நீங்கள் கேட்கலாம் நீங்கள் போடும் புள்ளடியின் பெறுமதி என்னவென. இந்த இடத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை எடுத்துரைப்பதற்கான கருத்து வெளியிடும் சுதந்திரமாகவே உங்கள் வாக்குகள் உள்ளன. நீங்கள் அரசாங்கத்தினாலும் அவர்களாலும் முடுக்கி விடப்பட்டுள்ள பிரசார மாயைகளுக்குள்ளும் உத்திகளுக்குள்ளும் சிக்குவீர்கள் ஆயின், நீங்கள் அளிக்கப்போகும் வாக்குகள் தமிழரின் கதையினை முடிப்பதற்கான ஆயுதங்களாகவே இருக்கும். அரசாங்கமாக இருந்தால் என்ன ஏனைய சிங்களவர்களால் தலைமை தாங்கப்படும் கட்சிகளாக இருந்தால் என்ன அவர்கள் தமிழர்களுக்கென்று எந்தப் பிரச்சினையும் இல்லை என முள்ளிவாய்க்காலுடன் அடித்துக் கூறிவிட்டனர்.இப்படியானதோர் நிலையில் நீங்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தால் அது தமிழா்களுக்கென்று எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர்கள் கூறியதனை நீங்களும் ஆமோதிப்பதாக அமையும். இவ்வாறானதோர் வரலாற்றுத் துரோகத்திற்கு நீங்கள் துணை போகாதீர்கள். தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உங்கள் வாக்குகளை வழங்குங்கள். இதுவே இன்று எமக்கு உரிமைகளைப் பெறுவதற்கு எஞ்சியுள்ள வழியாகும். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

Author: TELO Admin