Hot News
Home » செய்திகள் » வடமாகாண தேர்தல் மூன்றாம் கட்டப் போர்! தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான்!- விக்னேஸ்வரன்

வடமாகாண தேர்தல் மூன்றாம் கட்டப் போர்! தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான்!- விக்னேஸ்வரன்

உலகத்தின் உதவிகளுடன் ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இத் தேர்தல் அமைகின்றது. எனவே இந்தப் போராட்டத்தில் பங்காளிகள் ஒவ்வொருவரும் போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் என கூட்டமைப்பின் வட,மாகாணசபை முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் உரையாற்றுகையில்,

தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான். வருவது வரட்டும் என முன்னேறுவோம். புதிய பரிணாமத்தில் எங்கள் போராட்டத்தை நடத்த வல்லவர்கள் நாங்கள் என்பதை உலகத்திற்கு சொல்ல நாங்கள் முயற்சிக்கிறோம்.

பிரிந்து நின்ற தமிழ் பேசும் மக்கள் வட மாகாணசபை என்ற அலகின் கீழ் எங்கள் ஒற்றுமையினை உலகறியச் செய்வோம். அதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் அமைந்திருக்கின்றது.

எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே. சொந்த மக்களை எதிரிகளாக சித்தரித்து, தொடர் யுத்தத்தில் ஈடுபடுத்தி, வாழ்வாதாரத்தை அழித்து, உயிர்களைப் பறித்து, உடல்களைச் சின்னாபின்னமாக்கி விட்டு இராணுவத்தை பயன்படுத்தி இப்போதும் அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் அரசாங்கத்தின் தூதர்களான அவர்கள் அரசியலை பண்டமாற்றாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் தெருக்கள் தருகிறோம். நீங்கள் வாக்குகளை தாருங்கள் என்று கேட்கிறார்கள்.

தெருக்களை அவசரமாக போட்டார்கள் அது யார் பணம்? எங்களுடைய அவலங்களைப் பார்த்து அண்டை நாடுகள் கொடுத்த பணத்தில் போடப்பட்டது.

அங்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது யாருக்கு? எம்மவருக்கா? தெற்கிலிருந்து வந்த சிங்கள மக்களுக்கா?

1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரை இந்தப் பக்கம் தலைவைத்தும் பார்க்காத ஆட்கள் தெருக்களை ஏன் போட்டார்கள்?

வீடுகளை, உறவுகளை பறிகொடுத்து சொந்த வாழ்விடம் திரும்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களுக்காகவா தெருக்கள் போடப்பட்டது? இல்லை.

இராணுவம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லவே வீதி போடப்பட்டது.

காப்பற் வீதிகளை காண்பித்து எங்கள் விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பை எடுத்துச் சென்று தெற்கில் விற்றுக் கொள்ளை லாபம் பெறவே இந்த வீதிகள் உதவி வருகின்றன.

அதைவிட யாரோ கொடுத்த பணத்தில் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திறப்பதற்கு நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் பணம் மக்களுடைய பணம்.

இராணுவத்தை எம் மத்தியில் நிலை நிறுத்துவதற்கும், தங்கள் பகட்டுக்குமே இந்த மாதியான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

டக்ளஸ், தவராசா, அங்கயன் ஆகிய மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து.

எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால். எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு துயரம். 2009ம் ஆண்டு நடந்த துயரம் என முக்கியமான சம்பவங்கள் பலவற்றின் போது அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள் அங்கம் பெற்றிருந்தார்கள்.

எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் பண்டமாற்று அடிப்படையிலான அரசியல் செய்ய விரும்பவில்லை. எங்கள் அரசியலும், நிர்வாகமும் மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஊழல் அற்ற உயிருள்ள நிர்வாகம்.

அதன் மூலம் சட்டத்தின், நீதியின், ஆட்சியை நிலை நிறுத்துவோம். அதிகார துஸ்பிரயோகத்திற்கு இடமில்லை.

மேலும் நாம் இருநோக்குகளைக் கொண்டிருக்கின்றோம். ஒன்று தூரநோக்கு, மற்றயது கிட்டிய நோக்கு. தூரநோக்கு என்பது தமிழ் மக்கள் பாராம்பரியமாக வாழ்ந்த அவர்களது பூர்வீகமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாம் ஒரு தேசிய அலகு என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை எமக்குரித்தாகின்றது என்பதே அந்தத் தூரநோக்கு, அதனை நாம் அடைந்தே தீருவோம்.

கிட்டிய நோக்கை பொறுத்தவரையில் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன் சார்ந்த நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்வோம்,

காணாமல்போனோர் பிரச்சினை, நிலப்பறிப்பு பிரச்சினைகள் போன்றவற்றுடன், இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவது. படிப்படியாக எங்கள் மண்ணிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவது போன்றவற்றிலும் நாம் கவனம் செலுத்துவோம்.

அதற்காக மத்திய அரசுடன் நம்பிக்கை அடிப்படையில் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். அதேபோன்று இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வு போன்றவற்றுடன் கல்வி, பொருளாதாரம் என சகல துறைகளிலும் எங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கப் உழைப்போம் என்றார்.
– See more at: http://www.tamilwin.net/show-RUmryIRaMVfs2.html#sthash.gEmlkgBy.dpuf

Author: TELO Media Team 1