Hot News
Home » செய்திகள் » மட்டு மாவட்டத்தில் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது இடங்களை விடுவிக்கக் கோரி பிரேரணை

மட்டு மாவட்டத்தில் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது இடங்களை விடுவிக்கக் கோரி பிரேரணை

மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது இடங்களை விடுவிக்க கோரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் 20/06/2018 அன்று சபையில் கொண்டு வரப்பட்டத்து.

இதன் போது பாராளுமன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், யுத்த காலத்தில் தமது தேவைக்காக ஆக்கிரமித்த சில பொது மற்றும் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்களை படையினர் விடுவித்துள்ள போதிலும் இன்னும் பல பொது பயன்பாட்டு காணிகளும் கட்டடங்களும் இதுவரை விடுவிக்கப் படாமல் உள்ளன.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் முறகொட்டான்சேனை இராமகிருஷ்ண பாடசாலை, மண்முனை மேற்கு பிரதேச சபையின் அலுவலக கட்டடம், மண்முனை மேற்கு தாண்டியடி மயானம், கொக்கட்டிச்சோலை ஆசிரியர் மத்திய வள நிலையம் போன்ற இடங்கள் இதுவரை படையினரால் விடுவிக்கப்படாமையினால்

மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலர்கள், பொது மக்கள் போன்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பு தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற இடங்களில், இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று விரைவில் விடுவிக்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்ட போதிலும், முன்னேற்றம் மந்த கதியிலேயே உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் மட்டக்களப்பு விமானப்படையினரால் மூடி வைக்கப்பட்டுள்ள திமிலதீவு – வலையிறவு பாதையினை பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுமாறும் இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளமையினால் பொது மக்களும் விவசாயிகளும் மிக மோசமான நீண்ட தூர பாதையில் சென்று அல்லல் படுவதையும் பாதுகாப்பு அமைச்சருக்கு எடுத்துரைத்தார்

இதே போன்றே வட மாகாணத்திலும் அரச கட்டிடங்களும், தனியார் காணிகளும் வீடுகளும் கூட இதுவரை முழுமையாக விடுவிக்கப்பட்டாமல் உள்ளமையினையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையானது பாரளுமற்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் அவர்களினால் வழிமொழியப்பட்டது. இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது பல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக உரையாற்றினர்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்தன அவர்கள் சில முகாம்களை அகற்றி வேறு இடங்களுக்கு மாற்றுவதில் இடப் பிரச்சனை உள்ளதால் தாமதமடைவதாகவும் எனினும் மிக விரைவில் குறிப்பிட்ட இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Author: TELOMedia