Hot News
Home » செய்திகள் » தபால் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும்

தபால் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும்

அரசாங்கம் தபால் ஊழியர் தொழில் சங்கங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் தமது கோரிக்கைகளுக்காகக் கடந்த 11 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தபால் ஊழியர்களின் கோரிக்கைகளும் போராட்டமும் நியாயமானவையாகும்.

ஆனால், நல்லாட்சி எனக் கூறும் அரசாங்கம் தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் செவிகொடுக்காது போராட்டத்தை முறியடிக்கவே முற்பட்டு நிற்கிறது.

அரசாங்கம் வழமையாகத் தொழிலாளர் போராட்டங்களில் கடைப்பிடித்து வரும், தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோதப் போக்கைத் தொடர்ச்சியாகக் கைக்கொள்வதன் மூலம் உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்க முற்படுவதை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் குழுசார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.க.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில், நாட்டின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பானது ஒற்றுமையான முறையில் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

தமக்குரிய சம்பள உயர்வு, நியமனங்களில் பின்பற்றப்படும் முறையற்ற நடைமுறையைத் தவிர்த்தல், தபால் துறையினைத் தனியார்மயப்படுத்தும் முயற்சியைக் கைவிடல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறும் இப் பணிப்புறக்கணிப்பு பன்னிரண்டு நாட்களையும் தாண்டி இடம்பெற்றுவருகிறது.

ஆனால், அரசாங்கமோ இதற்குச் செவிசாய்க்காது, தபால் ஊழியர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சம்பளம் வழங்குவதை நிறுத்தியும், பொலிஸ் மூலம் தபால் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக மிரட்டியும் வருகிறது. இவை உழைப்பாளர்களை உதாசீனம் செய்யும் அரசின் மெத்தனப் போக்கையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைச் சிந்தனையையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இது அனைத்துத் தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய நிலைப்பாடாகும். எனவே, அரசாங்கம் உடனடியாகத் தபால் ஊழியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதன்மூலம் இந் நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும் என எமது கட்சி வலியுறுத்துகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author: TELOMedia