Hot News
Home » செய்திகள் » பெண்களின் பொருளாதார உயர்வில் அக்கறை அவசியம்

பெண்களின் பொருளாதார உயர்வில் அக்கறை அவசியம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி மகளிர் தினத்தில் வெளியிட்ட அறிக்கையில், தேசத்தின் சமூக – பொருளாதார நலனுக்கான பெண்களின் பங்களிப்பைப் பற்றி வலியுறுத்தினார்கள். அறிக்கையின் அடிப்படைச் செய்தி மிகத் தெளிவாக இருந்தது.

பெண்கள் பொருளாதாரத்தில் ஈடுபடுவது மற்றும் அரசியல் அரங்கங்களில் பங்கு பெறுவது குறைந்தளவிலேயே காணப்படுகிறது. அது ஒரு எதிர்மறையான விம்பத்தைக் காட்டுகின்றது என்றே கூற முடியும்.

கல்வி, இலக்கியம் மற்றும் தாய் ஆரோக்கியம் என்பவற்றில் தெற்காசியாவில் இலங்கை ஒரு முன்னுதாரணமான நாடாக இருக்கின்றது. அத்துடன் சுகாதாரம் மற்றும் பால்நிலை தொடர்பான இடைவெளிகள் குறைந்தளவில் காணப்படும் நாடாக இலங்கை உள்ளது. ஆன போதும், சமூக -பொருளாதார அபிவிருத்தியின் பங்களிப்பில் பெண்கள் ஒரு கட்டத்திலேயே தங்கியுள்ளார்கள் எனக் கூற முடியும்.

பங்களாதேஷ் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந்நாட்டில் பெண்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து அபிவிருத்தின் பாதையில் நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள் எனக் கூற முடிகின்றது. அவர்கள் முன்னர் இருந்த கட்டத்திலிருந்து சற்று உயர்நிலையில் உள்ளனர். ஆனால் இலங்கையில் பெண்கள் நீண்ட காலமாகவே ஒரே இடத்திலேயே நிற்கிறார்கள் என்பது நன்கு தெரிகின்றது.முன்பு அபிவிருத்திக்கான பெண்களின் பங்களிப்பானது நல்ல நிலையில் காணப்பட்டது. ஆனாலும் தற்போது பெண்கள் தொழில்களில் ஈடுபட்டிருப்பதுடன் ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவிலேயே உள்ளனர்.உலக வங்கியின் சமீப கால அறிக்கையின்படி, இலங்கையில் பெண்கள் தொழில்களில் ஈடுபடுவதும், பொருளாதார அபிவிருத்திற்கான அவர்களின் பங்களிப்பும் குறைந்திருக்கின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையில் நோக்கினால், தொழில்களில் பெண்களின் பங்களிப்பு 36% ஆகவும், ஆண்களின் பங்களிப்பு 73% ஆகவும் இருக்கின்றது. குறிப்பிடத்தக்க வகையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளில் விகிதம் உயர்திருந்தாலும், அதில் சில சிக்கல்கள் இருப்பது குறிப்பிடப்பட வேண்டும். குறிப்பாக அவர்களின் பங்களிப்புக்கான சம்பளம்(நியாயமான சம்பளம்) கிடைப்பதில்லை. இலங்கையில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான சம்பள இடைவெளியானது அதிகமாக உள்ளது. பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை கீழ்மட்டத்தில் உள்ளது.

இலங்கையில் சனத்தொகையில் அதிகளவு பெண்களாக இருந்தாலும் வாழ்வாதாரங்களுக்கான வசதி வாய்ப்புகள் பெண்களுக்கு அரிதாகவே காணப்படுகின்றன. பொருளாதார அபிவிருத்தியில் பங்குபெறுவதற்கு பெண்கள் சவால்களை தினமும் சந்திக்கின்றனர். குடும்ப சுமை என்பது பெண்களின் தலையில் விழுந்திருப்பதனால் அவர்களுக்கு தொழில்களில் நேரடி ஈடுபாடு வழங்க முடியவில்லை.

முக்கியமாக பெண்தலைமைத்துவக் குடும்பங்களிலுள்ள பெண்கள்,போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த பெண்கள் என பல்வேறு வகையான தரப்பில் பெண்களைக் குறிப்பிட முடியும். இவர்களுக்கான தேவைகள் ஒவ்வொரு திசையில் உள்ளன என்பதும் அறிந்து கொள்ளப்பட வேண்டும். பெண்கள் குடும்ப பாரத்தை சுமப்பதனால் இலங்கை அரசு பெண்களுக்கென சில தீர்மானங்கள் எடுத்துள்ளது. அதில் ஒன்றாக பெண்களுக்கான தொழில் நேரத்தை குறைக்கத் தீர்மானித்திருப்பதைக் குறிப்பிட முடியும். அத்துடன், இலங்கை முழுவதுமாக ‘டே கெயார்’ விடுதிகளை அமைக்கத் தீர்மானித்துள்ளது. அனால் இவை அனைத்தும் ஆலோசனைக் கட்டத்திலேயே தங்கியுள்ளன.

இலங்கை வறுமை ஆராய்ச்சி நிலையத்தால் பெண்களின் பொருளாதார ஈடுபாட்டைப் பற்றி பல வகையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறிப்பாக வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கைகள் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதையும் குறிப்பிட முடியும். ஆனாலும் அது எந்தளவு நடைமுறையில் இருக்கின்றது என்பதை நாங்கள் ஆராய வேண்டும். கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எழுத்துகளில் மட்டும் பெண்களை ஊக்குவிப்பதாக இருக்கக் கூடாது.

உதாரணமாக கடல் தொழில்களில் பெண்கள் ஈடுபட்டாலும் கடல் தொழில்களுக்கான கொள்கைகளில் பெண்களுக்கான எந்தவொரு விசேட ஏற்படும் வழங்கப்படவில்லை. கடல் தொழில்களுக்கான கொள்கைகள் ஆண்களுக்கான கொள்கைகளாகவே அமைந்துள்ளன.

அத்துடன் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக பெண்கள் செல்வது சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பெண்கள் சட்டத்திற்கு முரணான பாதையில் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக பெண்கள் ஏன் செல்கிறார்கள்? அவர்கள் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் என்ன? என்வற்றை கருத்தில் கொள்வது மிக முக்கியமானது. அத்துடன் விருப்பமான தொழில்களில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதும் முக்கியம்.

பெண்கள் செய்ய விரும்பும் தொழில்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கான நிலையான தொழில்களோ அல்லது வெளிநாடு செல்லும் பெண்களுக்காக முறையான பாதுகாப்போ வழங்கப்பட வேண்டும்.

(வறுமை ஆராய்ச்சி நிலையம்)

Author: TELOMedia