Hot News
Home » செய்திகள் » 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பித்து வைப்பு

1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பித்து வைப்பு

வடக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகணங்களுக்கான இந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர 1990 என்ற இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவை இன்று உத்தியோகபூர்வமாக வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேரடியாக இணைந்து உரையாற்றினார்

வடமாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பொருட்டு 55 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கென இந்தியா 26 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு 7 அம்பியூலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்பியூலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 3 அம்பியூலன்ஸ் வண்டிகள் வீதம் இத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்திற்கு 21 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஊவா மாகாணத்திற்கு 34 அம்பியூலன்ஸ் வண்டிகளும் இந்த சேவையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்றைய தினம் இந்த சேவையின் கீழ் பணியாற்றும் சாரதிகள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கான நியமனப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங், வடமாகாண முதமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்