நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பேசிக் கொண்டிருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறுக்கீடு செய்துள்ளார். அதையடுத்து இருவரும் சூடாக வார்த்தைகளால் மோதிக் கொண்டுள்ளார்கள். வடக்கு மக்களைப் பற்றி உங்களுக்கு கவலையில்லை. நீங்கள் நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லாட்சி அரசு உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. நாங்கள் எங்களது ஆட்சிக் காலத்தில் 12 ஆயிரம் பேரை மறுவாழ்வு வழங்கி விடுதலை செய்தோம் என்று நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சி.சிறிதரன், நீங்கள் வடக்கு மக்களைப் பற்றிப் பேசவேண்டாம். நீங்கள் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்று குறிப்பிட்டுள்ளார். சூடாகிய நாமல் ராஜபக்ச, நான் வடக்கு மக்களை நேரில் சந்தித்தேன். அந்த மக்கள் படும் கஸ்டம் எனக்குத் தெரியும். நான் சிறைக்கும் சென்றுள்ளேன். அங்குள்ள இளைஞர்கள் படும் கஸ்டம் எனக்குத் தெரியும் என்றார்.அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அந்த அப்பாவி இளைஞர்களை சிறைக்குள் அனுப்பியது உங்கள் அப்பாதான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.