Hot News
Home » செய்திகள் » க.பொ.த. (உ/த) பெறுபேற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தேசிய ரீதியில் பின்னடைவு

க.பொ.த. (உ/த) பெறுபேற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தேசிய ரீதியில் பின்னடைவு

கல்வி பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தேசிய ரீதியில் பின்னடைவைக் கண்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் 4ஆவது இடத்தையும் கிழக்கு மாகாணம் 9ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

பாடசாலை பரீட்சாத்திகளின் முடிவுகளின் அடிப்படையில் வட மாகாணம் நான்காம் இடத்தையும், கிழக்கு மாகாணம் 09ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. வட மாகாணத்திலிருந்து 12,265 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளபோதும் 8,007 பேர் மட்டுமே சித்தியடைந்துள்ளனர். 904 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை. 176 பேர் 03 ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து 15,201 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளபோதும் 9 212 பேர் மட்டுமே சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் 1,513 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையாதுள்ளனர். 160 பேர் 03 ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளையும் சேர்த்து கணிப்பிடும்போது தேசிய மட்டத்தில் வட மாகாணம் 06ஆம் இடத்திலும் கிழக்கு மாகாணம் 09ஆம் இடத்திலுமுள்ளன.

வட மாகாணத்தில் 14, 479 பேர் பரீட்சைக்குத் தோற்றி8,988 பேர் சித்தியடைந்த போதிலும், 1,234 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியடையவில்லை. கிழக்கு மாகாணத்தில் 20,247 பேர் பரீட்சைக்குத் தோற்றிய போதும், 11,341 பேர் சித்தியடைந்துள்ள நிலையில் 2,267 பேர் ஒரு பாடத்திலேனும் சித்தி அடையவில்லை.

மாவட்ட அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் தேசிய நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் 23ஆவது இடத்தையும், அம்பாறை மாவட்டம் 24ஆவது இடத்தையும், திருகோணமலை மாவட்டம் 25ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

வட மாகாணத்தில் தேசிய நிலையில் மன்னார் மாவட்டம் 06ஆவது இடத்தையும், யாழ். மாவட்டம் 13ஆவது இடத்தையும், வவுனியா மாவட்டம் 18ஆவது இடத்தையும், 19ஆவது இடத்தை முல்லைத்தீவு மாவட்டமும், 22ஆவது இடத்தை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளன

இப் பரீட்சை முடிவுகளுக்கமைய தேசிய மட்டத்தில் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம், தென்மாகாணம் ஆகியன பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: TELO Media Team 1