Hot News
Home » செய்திகள் » ஒருமித்த நாட்டுக்குள் தமிழருக்கான அரசியல் தீர்வே எமது கோரிக்கை

ஒருமித்த நாட்டுக்குள் தமிழருக்கான அரசியல் தீர்வே எமது கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றி கொள்ளும் புதிய அரசிலமைப்பு நிறைவேறலாம், அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கிறதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வும், தமிழ்த் தலைமையின் வகிபாகமும்” எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் (12) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, எமது கட்சியினர் கணக்கறிக்கை சமர்ப்பிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் முன்வைத்தார். அவரின் கேள்விக்கான பதில்களை வழங்குவதோடு எனது கருத்துரையை நான் ஆரம்பிக்கின்றேன். எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும், வருடாந்தம் தேர்தல் ஆணையகத்துக்கும் கட்சியின் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதனை நீங்கள் பரிசீலிக்கலாம்.

ஜனநாயக வழியில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வை பெற முடியாது என்று இங்கு சிலர் கூறியிருந்தார்கள். ஜனநாயகம் இல்லாமல் வேறு எந்த வழியில் தீர்வை பெற முடியுமென அவர்கள் நினைக்கின்றார்களோ தெரியவில்லை. நாம் எல்லோரும் ஒரு தேசத்தில் இருக்கின்றோம். ஆனால் தேசம் என்ற சொல்லுக்கு எந்த வரைவிலக்கணமும் இல்லை. ஆகவே, இங்கு மக்கள் தான் முதன்மை படுத்தப்படுகிறார்கள். மக்களுக்கும் எந்த வகையில் தீர்வைப்பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆராய்ந்தால் அது ஜனநாயக வழியில் முடியும்.

நாம் கடந்து வந்த காலங்களில் பெற்ற அனுபவங்களை வைத்துக் கொண்டு பன்னாட்டின் ஊடாக எமது தீர்வுகளை, பதில்களை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

சர்வதேசம் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. அதனை நாம் இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டும். ஜனநாயகம் ஊடாக தீர்வைப் பெற வேண்டும். ஊடகங்கள் இன்று மிக மோசமான அரசியலை செய்துகொண்டு இருக்கிறது. உணர்வுகளை எழுப்பி விட்டுச் செல்கிறது. ஜனநாயகம் இல்லாமல் வேறு வழி என்றால் ஆயுத போராட்டமா? உணர்வுகளை தூண்டி விட்டுச் சென்று விடுவார்கள்.அதனை முகாமை செய்வது யார்? புதிய அரசியலமைப்பில் என்ன விடயம் உள்ளது? என்று தெரிந்து கொண்டு அதனை பத்திரிகைகள் எழுத வேண்டும்.

புதிய அரசிலமைப்பில் மாகாணங்களை இணைக்கும் பொறிமுறை உண்டு என்று சொல்லப்பட்டது. அதனை ஒரு பத்திரிகை தவிர வேறு எவரும் பிரசுரிக்கவில்லை. இந்த ‘ஏக்கிய இராஜ்ஜிய’ என்ற பதம் ‘ஒருமித்த நாடு’ என்று தான் பொருள்படும். நான் கூறிக் கூறி சலித்து விட்டேன். ஆனால் அந்த பதம் ஒற்றை ஆட்சியை குறிக்கிறது என்று ஒரு பரவலான கருத்துள்ளது. புதிய அரசியமைப்பில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ ‘ஒருமித்த நாடு’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசிலமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும். ‘ஒருமித்த நாட்டுக்குள்’ தீர்வு வேண்டுமென சொல்கிறோம். ‘தனி நாடு’ என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வையே நாம் கேட்கிறோம். அதை விட்டு விட்டு தமிழீழ கனவோடு இருக்கக் கூடாது. நான் கூறுவது வெளியே போகும் போது கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால் நான் உண்மை நிலைப்பாட்டை சொல்ல வேண்டும்.

நாம் உண்மை பேச வேண்டும். சிங்கள மக்கள் மனதை வெல்ல வேண்டும். எங்களுக்கு உரியதைத் தான் நாம் கேட்கிறோம். நாடு பிரிய மாட்டாது. மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்று அவர்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும். நாடு பிளவு படுவதை அவர்கள் விரும்பவில்லை.

அரசியலில் எதுவும் நடக்கலாம். இதுதான் நடக்கும் என்று சாஸ்த்திரம் சொல்வதைப் போன்று கூற முடியாது. புதிய அரசியலமைப்பு வாராது என்று கூறினர். ஆனால் அதன் ஆரம்பம் நேற்று முன்தினம் நடந்து விட்டது. புதிய அரசியலமைப்பு வந்தால் தமிழ் மக்களுக்கும் தீர்வு கிடைக்கும்.அரசியலமைப்பு வரலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உண்டு. நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் பலம் எம்மிடம் உள்ளது.

அதனை நாம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளக் கூடாது. நாட்டில் இன்னமும் முழுமையாக ஆட்சி அமைக்கப்படவில்லை.நேற்றும் கூட பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். தேசிய அரசாக மாறும் நிலைப்பாடும் அங்குள்ளது.

புதிய அரசியலமைப்பு நிறைவேற நாம் முயற்சிக்க முடியும். படிப்படியாகத் தான் முன்னேற முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில், ‘வைத்தால் குடும்பி, எடுத்தால் மொட்டை’ என்ற நிலை உள்ளது. சர்வதேச நாடுகள் அனைத்தும் ஆதரவு தந்துள்ள நிலையில் எமது சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நல்ல தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மென் போக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்தும் சூழல் வேண்டாம். எங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இங்கிருந்து எல்லோரும் புலம் பெயர்ந்தால் இங்கு வெறுமை உண்டாகும் என்றார்.

Author: TELO Media Team 1