Hot News
Home » செய்திகள் » ஜெனிவாவில் `ரெலோ` சிவாஜியைச் சூழ்ந்த ‘இராணுவத்தை பாதுகாக்கும்’ அரச ஆதரவுக் கும்பல்

ஜெனிவாவில் `ரெலோ` சிவாஜியைச் சூழ்ந்த ‘இராணுவத்தை பாதுகாக்கும்’ அரச ஆதரவுக் கும்பல்

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான ‘இராணுவத்தை பாதுகாக்கும்’ அரச ஆதரவுக் கும்பல் முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை சுற்றி வளைத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு நேற்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இடைநடுவில் வெளியே சென்றுள்ளனர்.

இக் கூட்டத்தில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன், `ரெலோ` சிவாஜிலிங்கம், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பாதிரியார் இம்மானுவேல், நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகள், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தென்னிலங்கையின் இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளால், இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது விசனமடைந்த இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் இராணுவத்தினரே யுத்தத்துக்கு பின்னரான மீட்பு பணிகளை முன்னெடுக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் அமைப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நிகழ்வில் சர்ச்சை நிலையும் நிலவியுள்ளது. நிகழ்வை நடத்தியவர்கள் சர்ச்சை நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதிலும் வாக்குவாதம் தொடர்ந்தது.

இதனையடுத்து சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

sivaji in geneva 1

Author: TELO Media Team 1