Hot News
Home » செய்திகள் » செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்

செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்

வடமாகாண சுகாதார பணிப்பாளர், மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் சுகாதார அமைச்சரை சந்தித்து மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்.
மன்னார் மாவட்டத்தின் சுகாதார  நிலைமை இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருப்பதனால் மாவட்ட வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வது மிகவும் அத்தியாவசியமானது என  சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் போதிய வசதிகள் இன்மையால் மக்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளை நோக்கி செல்ல வேண்டியிருப்பதால் மன்னார் மாவட்ட மக்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.  ஏனைய வைத்தியசாலைகளில் கட்டிட, வைத்திய வசதிகள் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும் மன்னார் வைத்தியசாலை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை  சுட்டிக்காட்டப்பட்டது.
மன்னார் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, சத்திரசிகிச்சைக் கூடம், நிரந்தர நோயாளர் விடுதிகள்,  வைத்தியர்களுக்கான நிரந்தர தங்குமிட வசதிகள் போன்றவற்றை அமைப்பது தொடர்பில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் கதிரியக்க இயந்திரங்கள், சத்திரசிகிச்சை கூடத்துக்கான உபகரணங்கள், ஆய்வு கூட உபகரணங்கள், கணினிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் திட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு விசேட முக்கியத்துவம் வழங்கி வைத்தியசாலயினை அபிவிருத்தி செய்வதற்கு விரைந்து ஆவன செய்வதாக சுகாதார அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற வைத்தியர்கள், தாதியர் பற்றாக்குறை தொடர்பிலும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பிலும் கவனத்தில் கொண்டு உரிய மருத்துவ ஆளணியினரை எதிர்வரும் காலங்களில் நியமிப்பதாக சுகாதார அமைச்சு அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் செல்வம் அடைக்கலநாதனால் மன்னார் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.