Hot News
Home » செய்திகள் » தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் ஹிஸ்புல்லாவுக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் ஹிஸ்புல்லாவுக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கும் இருக்கும் தொடர்புகள் பல கேள்விகளை எழுப்புகிறது. தேசிய தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் விசாரிக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இந்த தாக்குதல்கள் குறித்து எந்த ஒரு தனி சமூகத்தையும் விமர்சிக்க கூடாது. அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டபோதும் இந்நாட்டு முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை.அதனை நாங்கள் மதிக்கிறோம்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்புகள் பல கேள்விகளை எழுப்புகிறது. அவர்கள் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும். அடிப்படைவாதம் குறித்து முஸ்லிம் அமைப்புக்கள் பல அரச புலனாய்வுத்துறையிடம் முன்னதாக கூறியிருந்தன. நாங்கள் வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தோம். ஆனால் கிழக்கு ஆளுநர் அதனை ஹர்த்தால் என்கிறார். அது ஹர்த்தால் இல்லை என நான் தெளிவாக கூறுகிறேன்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விசேட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தனியான அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களை மாத்திரமே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளே ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.

சட்டத்திற்கு முரணாக இந்த அமைச்சு பொறுப்பை வைத்திருக்கும் ஜனாதிபதி, நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முதலாவது நபராக மாறியுள்ளார்.

இதேவேளை, கடும்போக்காளராக மாற்றும் நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரிடம் முஸ்லிம் குழுக்கள் பல ஆண்டுகளாக முறைப்பாட்டினை வழங்கி வந்தனர்.

2017 ஆம் ஆண்டு ஷஹாரனை கைது செய்ய வேண்டும் என கோரி காத்தான்குடியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தார்கள்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் பற்றியும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடனான அவருடைய தொடர்புகள் பற்றியும் தற்போது பாரிய கேள்விகள் எழுகின்றன.

இதுபற்றியும், இந்த குழு ஏனைய அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினருடன் வைத்திருந்த உறவுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Author: TELO Media Team 1