Hot News
Home » செய்திகள் » பதவிக்காக இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள்

பதவிக்காக இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள்

ஆட்சியைக் கைப்பற்ற இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன்  தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று (16) இடம்பெற்ற ஆலய மடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களால் மீன்சந்தை தொடர்பான முறைப்பாடு எழுத்து மூலமாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

ஒரு மதத்தை அல்லது சமூகத்தை பிறிதொரு சமூகம் இழிவுபடுத்தி முடக்க முற்படும் போதே வன்முறைகள் உருவாகின்றது. அதன் மூலமே நாட்டில் யுத்தமும் ஏற்படுகின்றது. ஆகவே சமூகங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

குறித்த ஆலயத்தின் நடுவிலே மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இச்சந்தையினால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடு தமிழ் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆலயத்தில் மக்கள் மேற்கொள்ளும் தியானம் மற்றும் வழிபாடுகளுக்கும் இச்சந்தையால் குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளது.

மீன் சந்தையில் இருக்கும் கழிவுகளை பறவைகள் ஆலய வளாகத்தினுள் போடுவதனால் ஆலயத்தின் புனிதத்தன்மை கெட்டுவருகின்றது. இதனை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இச்சந்தை உடன் அகற்றப்படவேண்டும்.

குறித்த ஆலயம் அமைக்கப்பட்டு பல வருடங்களாகின்றது. ஆனால் மீன்சந்தை சில வருடங்களுக்கு முன்னர்தான் நிர்மாணிக்கப்பட்டது. இதனை திட்டமிடப்பட்ட செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் இந்து கலாசார அமைச்சு மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சுக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன் இதற்கான தீர்வை இரு அமைச்சுக்களும் இணைந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறான செயற்பாடுகளால்தான் நாட்டில் இனக்கலவரங்கள், மதக்கலவரங்கள் இனமுறுகல்கள் ஏற்படுகின்றன. தற்போது இந்த நாட்டிலே பாரிய வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. மனிதர்களின் உயிருக்கு உத்தரவில்லாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தங்களது சுய நலத்துக்காக இனங்களுக்கிடையே முறுகல் நிலையை தோற்றுவித்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைக்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் தமிழர்கள் நிதானத்துடன் செயற்பட்டு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். சமாதானத்தை சமத்துவத்தை உண்டுபண்ணுகின்ற மனப்பான்மை தமிழர்களிடம் நிறைவாக உள்ளது. இந்து மதமும் அதனையே போதிக்கின்றது என்றார்.