Hot News
Home » செய்திகள் » சிறுமியின் பொதுச் சுடரேற்றலுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடங்கியது

சிறுமியின் பொதுச் சுடரேற்றலுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடங்கியது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை இறுதி யுத்தத்தின் போது பலரையும் கலங்கச் செய்த ஒரு புகைப்படமான தாய் உயிரிழந்த போதும் அதனை அறியாது பச்சிளம் குழந்தை ஒன்று பால் குடிக்க முயலும் புகைப்படத்தில் இருந்த அந்த சிறுமியே பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் துயர் சுமந்து நிற்கும் எம் உறவுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரை முதன் முதலாக ஏற்றிவைத்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் சிறுமி ராகினி தனது கையொன்றை பறிகொடுத்திருந்தார்.

அதைவிட பேரவலம் என்னவெனில் இறந்த தனது தாயிடம், அப்போது பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருந்த ராகினி பால் குடித்த காட்சி தான்.

தாயின் உயிர் பிரிந்தது அறியாமல், தந்தை படுகாயங்களுக்கு இலக்காகி உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியாமல் அந்த எட்டு மாத பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடித்த காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்கச் செய்து விட்டது.

தற்போது ராகினி அப்பம்மாதான் பாதுகாப்பில் வளர்ந்து வரும் நிலையில் பதினொரு வயது சிறுமியான அவரே இன்று ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்துள்ளமையாது முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது.

ராகினி போன்ற எத்தனையோ குழந்தைகள் இறுதி யுத்தத்தின் போது தாயை இழந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இன்னும் எத்தனையோ துயரங்கள் நினைக்கும் போது பதறுகிறது நெஞ்சம்.

இதையடுத்து தமிழ், ஆங்கில மொழிகளில் மே 18 முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டு மலரஞ்சலியுடன் நிகழ்வும் இடம்பெற்றது.