Hot News
Home » செய்திகள் » முகநூலில் தம்மிக்க பெரேராவின் அமைச்சரவை பற்றிய விபரங்கள்

முகநூலில் தம்மிக்க பெரேராவின் அமைச்சரவை பற்றிய விபரங்கள்

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் அமைச்சரவை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் முகநூலில் சில தகவல்கள் பதியப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் தம்மிக்க பெரேராவின் அரசாங்க அமைச்சர்கள் சிலர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா, நீதி அமைச்சர் நாகனந்த கொடிதுவக்கு, நிதி அமைச்சர் ரொஹான் பெலவத்த என குறிப்பிட்டு முகநூலில் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சாரம் தம்மிக்க பெரேராவின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரகசியமான முறையில் இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரவை, அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார்.


பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உத்தியோகப்பூர்வ வாகனத்தை தவிர்த்து விட்டு ரணில் விக்ரமசிங்க, தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு சென்றதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


பிரதமர் இந்த சந்திப்பில், தற்போதைய அரசியல் நிலைமைகள், பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தம்மிக்க பெரேராவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.


ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பாக நாட்டின் பெரும்பாலான மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வெளியில் இருந்து புதிய முகம் வர வேண்டும் என பலர் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தகுதியான நபர் தம்மிக பெரேரா எனவும் தம்மிக்க பெரேரா ஜனாதிபதியாகவும் தான் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிக்க பெரேராவுக்கும் பிரதமருக்கும் இடையிலான மேற்படி சந்திப்பை இலங்கை பிரபலமான மாநாயக்க தேரர் ஒருவர் ஏற்பாடு செய்துக்கொடுள்ளதாக கூறப்படுகிறது.


எவ்வாறாயினும் தம்மிக்க பெரேரா, ரணில் விக்ரமசிங்கவின் யோசனை ஏற்றுக்கொண்டுள்ளதாக பேசப்படுகிறது. இதற்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் 2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டு விட்டதாக அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.