Hot News
Home » செய்திகள் » வன்முறைகளைத் தூண்டும் சில பௌத்த பிக்குகள்: தலதா குற்றச்சாட்டு

வன்முறைகளைத் தூண்டும் சில பௌத்த பிக்குகள்: தலதா குற்றச்சாட்டு

உலகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழும் பௌத்த மதத்தை பின்பற்றும் சமூகத்தைச் சேர்ந்த சில பௌத்த பிக்குகள் இனங்களுக்கிடையிலான மோதல்களை தூண்டும் வகையில் செயற்படுவது மிகவும் துர்பாக்கியமானது என சிறிலங்கா அரசாங்கத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்திருக்கின்றார்.

வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தலதா அதுகோரள, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பௌத்த சாசனத்தை பாதுகாக்க மகாநாயக்கர் தேரர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மே 18 ஆம் திகதியான நேற்றைய தினம் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைக்கைதிகளை விடுவிக்கும் பிரதான நிகழ்வு சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள உரையாற்றுகையில்,

“நாம் ஒரு கூட்டு சமூகமாக வாழும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூகத்திலுள்ள ஏனையவர்களுக்கு துன்புறுத்தாது வாழ வேண்டும். நாலாகிரி யானையை கட்டுப்படுத்தவும், ஆலாவக இராட்சசணை கட்டுப்படுத்தவும் புத்த பெருமானின் பொறுமையே காரணமாக அமைந்தது.

அதனால் நாம் பொறுமையுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். இந்த உன்னதமான பண்புகளைக் கொண்ட புத்த பெருமானால் போதிக்கப்பட்ட மார்க்கத்தை கடைபிடிக்கும் இனத்தைச் சேர்ந்த நாம் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டியது அவசியம்.

அதாவது குரோதத்தையும், பழிவாங்கும் சிந்தனையும் இன்றி மற்றையவர்களை நேசிக்கும் பண்புடன் வாழ வேண்டும். இந்த தர்ம போதனைகளை கடைபித்தவர்களாக நாம் வாழ்ந்திருந்தால் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்றது போன்ற துர்ப்பாக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்காது.

ஆனால் இன்று நாட்டில் சில பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் எம்மை அதிர்ச்சியடைய செய்கின்றன. சில பௌத்த பிக்குகள் மோதல்களை தூண்டும் வகையில் செயற்படுவதை நாம் காண்கின்றோம். அதனால் இந்த அரிய சந்தர்பபத்தை பயன்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மகாநாயக்கர்களும், தலைமை பிக்குகளும் முன்வந்து பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கான காலம் கனிந்துள்ளது. அதற்குத்தேவையான அனைத்துத் தேவைகளையும் எமது அரசாங்கமும் ஜனாதிபதியும் பெற்றுக்கொடுப்பார்கள். அதேவேளை அவர்களுக்குரிய கடப்பாடுகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள்” என தெரிவித்தார்.