Hot News
Home » செய்திகள் » புதிய அரசியல் யாப்பு வரவே வராது

புதிய அரசியல் யாப்பு வரவே வராது

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக புதிய அரசியல் யாப்பு வருவதற்கான சாத்தியம் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தென்பகுதி கட்சிகள் பிளவடைந்து நிற்பதனால் புதிய அரசியல் யாப்புக்கான சாத்தியங்கள் இல்லையென்றும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஆட்சியை கைப்பற்றிய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தமது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய அரசியல் யாப்பொன்று முன்வைக்கப்படும் என உறுதியளித்திருந்தனர்.

இதற்கமைய நாடாளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டு புதிய யாப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்ட தோல்வியில் முடிவடைந்த ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து அந்தப் பணிகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தெடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பணிகள் இடம்பெறப்போவதில்லை என்று வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே சிவாஞானம் யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அதேவேளை, உயிர் தஞ்சம் கோரி ஸ்ரீலங்காவுக்கு ஏதிலிகளாக வந்த ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பிரஜைகளை மேலும் அவலப்படுத்துவது மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் கையாலாகாத செயற்பாட்டையே எடுத்துக் காட்டுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.