Hot News
Home » செய்திகள் » ஞானாசாரரின் விடுதலையால் பெரும் உயிர் அச்சுறுத்தல்: சந்தியா விசனம்

ஞானாசாரரின் விடுதலையால் பெரும் உயிர் அச்சுறுத்தல்: சந்தியா விசனம்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானாசார தேரர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் தனக்கும், தனது பிள்ளைகளினதும் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள சிரேஷ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பை கொச்சைப்படுத்திய ஞானாசார தேரரை பொது மன்னிப்பில் விடுத்துள்ள ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் சந்தியா எக்னெலிகொட கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

காணாமலாக்கப்பட்ட பிரபல கேலிச்சித்திரக் கலைஞரும், புலனாய்வு ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு விசாரணையில் கைதுசெய்யப்பட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிணை கோரிக்கையை நிராகரித்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தது.

இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி திட்டித்தீர்திருந்ததுடன், அங்கிருந்த பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னலிகொடவுக்கும் அச்சுறுத்தல் விடுத்தார்.

இதன் காரணமாக ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்,2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி ஆறு வருடத்தில் அனுபவித்து முடிக்கக் கூடிய வகையில் 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு வெலிக்கடை சிறையில் ஞானசார தேரர் அடைக்கப்பட்ட நாள் முதல், இன்று வரையிலும் அவரை பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்வற்கான தீவிர முயற்சியில் பொதுபல சேனா அமைப்பும், தென்னிலங்கை கடும்போக்குவாத அமைப்புக்களும் ஈடுபட்டு வந்தன.

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமும் இதற்கான எழுத்துமூலமான கோரிக்கை கடிதங்களையும், சிங்கள பௌத்த தலைமை பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களின் கையொப்பங்களுடன் பொதுபல சேனா அமைப்பு கையளித்திருந்தது.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து கடந்த 19 ஆம் திகதியான வெசாக் பௌர்ணமி தினத்தற்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த சிறிலங்கா ஜனாதிபதி ஞானசார தேரரை நேரில் சந்தித்திருந்த நிலையில், மே மாதம் 23 ஆம் திகதியான இன்றைய தினம் வெலிக்கடை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருக்கின்றார்.

ஞானசார தேரரின் விடுதலைக்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட, ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டால் தனது உயிருக்கும் தன் பிள்ளைகளுடைய உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டார்.

சந்தியா எக்னலிகொட – ‘சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானாசார தேரரை விடுதலை செய்யப்போவதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டேன். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் பிரகித் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மன்றில் நுழைந்து நீதவான், சட்டத்தரணிகள் அனைவரையும் கெட்டவார்த்தைகளால் திட்டி, விசாரணைகளுக்கு இடையூறு செய்து, என்னையும் அச்சுறுத்திய விவகாரத்தில்தான் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

அவரை விடுதலை செய்வது மற்றும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் பேச்சானது கடந்த பெப்ரவரி மாதம் முதல் பேசப்பட்டு வருகிறது. நான் ஜனாதிபதிக்கும், நீதியமைச்சர், சட்டமா அதிபர், சாட்சிகளைப் பாதுகாக்கும் அதிகார சபைக்கும் எழுத்துமூலம் வினவியிருந்துன். சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் ஞானாசார தேரரை விடுதலை செய்கின்ற விவகாரத்தில் உண்மை தெரிந்தாக வேண்டும் என்று கோரினேன்.

எதிர்காலத்தில் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் எனக்கு அறிவிக்கப்படும் என்று பதில் வந்தது. எனினும் தற்போது இந்த விவகாரம் பேசப்படுகின்ற நிலையில் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் கிடைக்கவில்லை. ஞானசார தேரருக்கு ஜனாதிபதி விடுதலை கொடுப்பதன் ஊடாக அது சட்டத்தின் மீதான நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்துவிடுவதற்கு சமனாகிவிடும்”.

2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி உருவாக்கப்பட்ட நல்லாட்சியை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு உழைத்திருந்த சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர் மனோ கணேசன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஞர்னாசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய சந்தியா எக்னெலிகொட, தனதும், தனது பிள்ளைகள் இருவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கொழும்பிலுள்ள தூதரகங்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்தியா –“அசாத்சாலி, மனோ கணேசன் போன்றவர்களும் ஞானசார தேரருக்கு விடுதலை அவசியம் என்கின்றனர். ஆயினும் அரசியலமைப்பை பாதுகாக்கதானே வந்தீர்கள். மறந்துவிட்டீர்களா என்று அவர்களிடம் கேட்கவிரும்புகிறேன். நீதித்துறையை பாதுகாப்பது உங்கள் கடமையில்லையா என்று ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தால் அது எனக்கும், எனது பிள்ளைகளின் உயிருக்கும் அச்சுறுத்தலாகும். எனக்கான பாதுகாப்பு குறித்து நீதியமைச்சர், பிரதமரின் செயலாளர் ஆகியோரிடம் வாய்மூலம் கோரியிருப்பதோடு ஜனாதிபதி இந்த தீர்மானம் எடுத்தால் அதனை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளேன். ஐக்கிய நாடுகளுடன் தொடர்புள்ள அனைத்து தூதரகங்களிடமும் நான் எனது பாதுகாப்பு குறித்து கவனத்திற்கொள்ள முறையிட்டிருக்கின்றேன்”.