Hot News
Home » கட்டுரைகள் » தெற்காசியாவில் சீன ஆதிக்கத்தை தடுக்கும் மோடியின் வியூகம்

தெற்காசியாவில் சீன ஆதிக்கத்தை தடுக்கும் மோடியின் வியூகம்

நேபாளமும், பூட்டானும் இப்போது இந்தியாவின் கைகளுக்குள்; மாலைதீவையும் இலங்கையையும் சீன செல்வாக்கிலிருந்து மீட்டெடுப்பதே மோடியின் இன்றைய விஜயத்தின் பிரதான நோக்கம்.

மாலைதீவு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்நாடு சீனாவின் பிடியிலிருந்து முழுமையாக மீண்டு தற்போது இந்தியாவின் தோழமை நாடாகி விட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்றடைந்து, நான்கு மணி நேர விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.

இலங்கை மீது ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் இந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று முற்பகல் 11 மணியளவில் இந்தியப் பிரதமர் வந்தடைந்தார்.இந்தியப் பிரதமரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரில் சென்றிருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்ற மோடி தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியப் பிரதமருடன் 59 பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, கொழும்பு நகரில் பாதுகாப்பு பல மடங்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக இரண்டாவது தடவையாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நேற்றுமுன்தினம் மாலைதீவு சென்ற இந்தியப் பிரதமர், நேற்று இலங்கை வந்தடைந்தார். நரேந்திர மோடி இலங்கைக்கு மூன்றாவது முறையாகப் பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவுடன் உறவு மீண்டும் நெருக்கம்

அரசுமுறைப் பயணமாக மாலைதீவுக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நரேந்திர மோடி மாலைதீவு சென்றிருந்தார் . மாலே விமான நிலையத்தில் மாலைதீவு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டு ஜனாதிபதி இப்ராகீம் சோலி வரவேற்றார்.

கடந்த ஆண்டு நவம்பரில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராகீம் சோலி பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

எனினும் அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தற்போதைய பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மாலைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு அந்நாட்டு ஜனாதிபதி சோலி கோரிக்கை முன்வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.

அதேநேரம், மாலைதீவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ​ரேடர்களை இந்தியா அமைத்துள்ளது. இது மோடியின் தற்போதைய பயணத்தின் போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ரேடார்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளன. பல ஆண்டுகளாக மாலைதீவில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்து வருவதுடன், இராணுவ உதவிகள், பயிற்சிகள் மற்றும் திறமையான கட்டமைப்பு உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலைதீவின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருது, நேற்று முன்தினம் பயணத்தின் போது மோடிக்கு வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது.

சமீபத்தில் மாலைதீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. ஆனால், அங்கு நினைத்தபடி இல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோடி அங்கு சென்றிருந்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாலைதீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னரே பிரதமர் மோடி இலங்கை சென்றார்.

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவு செல்லும் வழியில் நேற்றுமுன்தினம் கேரளாவுக்கு வருகை தந்திருந்தார்.

அங்குள்ள குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். எடைக்கு எடை தாமரை மலர்களை துலாபாரமாகத் தந்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர், பா.ஜ.க கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்தே அவர் முதல் வெளிநாட்டுப் பயணமாக விமானம் மூலமாக மாலைதீவு சென்றார்.

சீனாவுக்கு எதிரான வியூகம்

பிரதமர் மோடியின் மாலைதீவு பயணம் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் இராஜாங்க ரீதியிலான மிக முக்கிய பயணமாக அமைந்திருந்தது.

மாலைதீவு நாட்டின் முன்னைய ஜனாதிபதியாக இருந்த அப்துல்லா யாமீன் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார்.

இதனால், அங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய ஜனாதிபதியாக இப்ராஹீம் சோலிஹ் பதவியேற்றது முதல் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

மேலும் அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தார்.

இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற உடன் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலைதீவு சென்றிருந்தார். இது இராஜாங்க ரீதியில் இந்தியாவுக்கு பல்வேறு அனுகூலங்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த பதவிக் காலத்தில் பிரதமர் மோடி செல்லாத அண்டை நாடுகளின் பட்டியலில் மாலைதீவு இருந்தது. தற்போது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலைதீவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவை ஓரங்கட்டும் பயணங்கள்

பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற உடனேயே தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனா சார்பு நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே மாலைதீவு மற்றும் இலங்கை பயணங்களை பிரதமர் மோடி மேற்கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மாலைதீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனா ஆதரவு நிலையை ஓரளவு வெளிப்படுத்தி வந்தன.

மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த அப்துல்லா யாமீன் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இந்தியாவின் உதவிகளை யாமீன் நிராகரித்து திருப்பி அனுப்பினார். இநிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்திய ஆதரவு பெற்ற முகமத் சாலி ஜனாதிபதியானார். அவரது வெற்றியைத் தொடர்ந்து மாலைதீவு -இந்தியா இடையேயான உறவு வலுவடைந்தது.

அதேபோல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன_- ரணில் ஆகியோரை ஒருங்கிணைத்ததில் இந்தியாவின் பங்களிப்பு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியது.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ்பக்ச அரசியல் ஆடுகளத்திற்கு வந்தார். அவரை களமிறக்கியதே இந்தியாதான் என பா.ஜ.கவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இதனால் இப்போது சீனாவின் ஆதிக்கம் குறைந்து இந்தியாவின் கைதான் இலங்கையில் ஓங்கி இருக்கிறது.

அண்மையில் கூட கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை பெற்றது இந்தியா. இந்த நிலையில் பிரதமர் மோடியின் மாலைதீவு, இலங்கை பயணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றன.

தற்போதைய நிலையில் இந்த இரு நாடுகளின் சீன சார்பு வேகத்தை மோடியின் பயணம் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

ஏற்கனவே நேபாளம் முற்று முழுதாக சீனாவின் காலனி நாடாகவே உருமாறி இருந்தது. அந்நாடு பெருவெள்ளத்தில் சிக்கிய போது இந்தியா கடும் நெருக்கடி கொடுத்து பணிய வைத்தது. இதில் இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சரான அப்போதைய வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஜெய்சங்கரின் பங்கு மிக முக்கியமானது.

மேலும் டோக்லாமை முன்வைத்து பூட்டானுக்கு சீனா குறி வைத்தது. ஆனால் இந்திய அரசின் திடமான எதிர்ப்பால் டோக்லாமில் இருந்து சீனா பின்வாங்கியது.

இந்த இருநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதன் மூலம் தெற்காசியாவில் இந்தியா இழந்த பிடியை பிரதமர் மோடி மீட்டெடுப்பார் என்கின்றன இந்திய வெளியுறவு வட்டாரங்கள்.