Hot News
Home » செய்திகள் » தமிழர்களைக் கடத்திக் காணாமல் ஆக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சஞ்ஜீவ பிரபாத் பிணையில் விடுதலை

தமிழர்களைக் கடத்திக் காணாமல் ஆக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சஞ்ஜீவ பிரபாத் பிணையில் விடுதலை

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்திச்செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரி சஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றின் உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வு அதிகாரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை அனுமதி கோரியிருந்த நிலையில் நேற்ரு (14) அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவின் தற்போதைய எதிர்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலமான 2008, 2009ஆம் ஆண்டுகளில் தலைநகர் கொழும்பில் தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் வைத்து 05 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திவரும் நிலையில் வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

வழக்கில் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டள்ள ஸ்ரீலங்கா கடற்படையின் புலனாய்வு அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் 11ஆவது சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் புலனாய்வு அதிகாரி சஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன பிணை அனுமதிக்கான கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெந்தி கடுமையான நிபந்தனைகளுடன்கூடிய பிணை அனுமதியை வழங்கியுள்ளார்..

இதற்கமைய சந்தேக நபருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிபந்தனைகளாக பிணையில் இருக்கும் காலத்தில் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அநாவசிய அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடாது என்றும், வெளிநாட்டுப் பயணங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதியினால் அறிவிக்கப்பட்டது.

சந்தேக நபரான கடற்படை அதிகாரி சஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உட்பட நான்கு பாரதூரமான குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளை துரிதமாக முடித்து அவற்றின் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சிறிலங்காவின் சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்த மறுநாள் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

அதேவேளை ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி துன்புறுத்திய நிலையில் காணாமல் ஆக்கியுள்ள சம்பவங்கள் தொடர்பான வழக்கில் சிறிலங்காவின் தற்போதைய முப்படைகளின் பிரதானியான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவும், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் வசந்த கரன்னாகொடவையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

இதனால் கடும்ஆத்திரமடைந்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்த விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டிருந்தார். எனினும் அதற்கு எழுந்த கடும் எதிர்ப்புக்களை அடுத்து அந்த உத்தரவு கைவிடப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.