Hot News
Home » செய்திகள் » நாங்கள் ஐக்கியப்பட்டால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை

நாங்கள் ஐக்கியப்பட்டால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை

நாங்கள் ஐக்கியப்பட்டால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்று நடந்த அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றியபோது,

“பிரபல்யமான சட்டத்தரணிகளுடனிருந்து வேலை செய்து தானும் யதார்த்த சட்டவல்லுனராக மாறியவர் அமரர் தர்மராஜா அவர்கள். என் பேச்சுக்கள், என் நீதிமன்ற தீர்ப்புக்கள் போன்றவற்றில் என்னிலும் பார்க்கப் பாண்டித்தியம் பெற்றிருந்தவர் அவர். எங்கே, எப்போது, என்ன பேசினேன், எந்தச் சட்டக்கருத்தை எவ்வாறு, எங்கு, எந்தத் தீர்ப்பின் மூலம் வெளியிட்டேன் என்றெல்லாம் தெரிந்து வைத்திருந்தார் அவர். நான் மறந்தவற்றை எல்லாம் அவர் நினைவில் வைத்திருந்தார்.

ஒளவையாரிடம் முருகன் கேட்கிறான் “ஒளவையே! உலகத்தில் பெரியது எது?” என்று. அவரின் பதில் நீண்டதாக இருந்தாலும் சுருக்கமான பதில் பிற்காலத்தில் வெளியிட்டார்கள். அதை மட்டும் கூறுகின்றேன் –

“பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்”

(அரவு என்று கூறியது ஆதிசேஷனை. அதாவது இந்த விசாலமான உலகம் பெரிதாக இருப்பினும் அதைத் தாங்குகின்றவர் ஆதிசேஷன் என்ற பாம்பு என்று ஐதீகம். உலகத்தைத் தலைமேல் தாங்குவதால் ஆதிசேஷன் உலகத்திலும் பெரியது என்கின்றார் ஒளவையார்)

“பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ அரவினைக்கொரு தலைப்பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் தம் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர்தம் உள்ளத் தொடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்று முடிக்கின்றார் ஒளவையார்.

ஆகவே உலகம் பெரிது; அதனிலும் பெரிது ஆதிசேஷன் என்ற பாம்பு. அதே பாம்பு அம்மனின் கையிலே சிறுவிரல் மோதிரமாக இருக்கின்றது. ஆகவே அம்மனே பெரியவள். ஆனால் அம்பாள் ஐயனின் உடலில் பாதி. அர்த்தநாரீஸ்வரர் என்ற முறையில் சிவனின் பாதி சக்தி. ஆகவே சிவனே பெரியவர் என்று முடித்திருக்க வேண்டும் ஒளவையார். அவர் அப்படி செய்யவில்லை. இறைவனோ அவர் தொண்டர்களின் மனதில் உறைந்திருக்கின்றார்.

ஆகவே சிவன் தனது தொண்டர்களின் மனதில் அடங்கி விடுகின்றான் என்கின்றார். இராவணன் தன் தசைநார்களை வைத்து வீணையை மீட்டிய போது இறைவன் இராவணனுக்கு மனம் உவந்து அவன் கேட்கும் வரங்கள் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கின்றான். தொண்டர்களின் அன்பு, திடம், வைராக்கியம் யாவும் இறைவனை அடிபணிய வைக்கின்றன. தொண்டர்கள்தான் பெரியவர்கள் அவர்களிலும் பார்க்க எதுவுமே பெரிதில்லை என்று ஒளவையார் கூறும் போது நாங்கள் தொண்டர்களின் பலத்தை முற்றாக அறிகின்றோம்.

இவ்வாறான ஒரு தொண்டரே அமரர் தர்மராஜா என்று கூறவருகின்றேன். அவர் மருதநாரின் தொண்டர், ஜீ.ஜீயின் தொண்டர், எஸ்.ஆர்.கனகநாயகத்தின் தொண்டர், N.T.சிவஞானத்தின் தொண்டர், நண்பர் குமார் பொன்னம்பலத்தின் தொண்டர். தொண்டர் என்ற விதத்தில் அவர் மருநாரை, ஜீ.ஜீயை, S.RIஐ, N.T.சிவஞானத்தை, குமாரை விஞ்சிய ஒருவராக வாழ்ந்தார். ஏன் கனகீஸ்வரனையும் விஞ்சியவராக வாழ்ந்தார்!

அவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஆழமாக நுழைந்து அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் சரியே என்று அடித்துக் கூறக் கூடிய ஒருவராக வாழ்ந்தார். கடைசிக் காலங்களில் இவ்வாறான மகானுபாவர்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டது தான் விந்தையிலும் விந்தை. நான் செய்தவற்றை, சிந்தித்தவற்றை சரியே என்று அடித்துக் கூறும் திறன் படைத்திருந்தவர் தர்மராஜா. நான் கூட என் நிலை பற்றிய சரி பிழையில் சிந்தனை செலுத்திய போது “இல்லை, நீங்கள் எடுத்த முடிவே சரி!” என்று ஆணித்தரமாக கூறியவர் நண்பர் தர்மராஜா அவர்கள்.

நல்ல வேளை எனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் முரண்பாடு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இல்லாதது தம்பி கஜனுக்கு ஆறுதல் தான். கட்டாயம் நான் கூறுவதை ஏற்குமாறு கஜனை வற்புறுத்தி இருப்பார் திரு.தர்மராஜா அவர்கள்!

காரணம் இன்றைய நிலை அப்படி என்பதை நண்பர் தர்மராஜா நன்றாக அறிந்திருந்தவர். வடகிழக்கை துண்டாட, படையினரை நிரந்தரமாக வட கிழக்கில் வைத்திருக்க, தமிழ் பேசும் மக்களை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கத் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் யாவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளதை அவர் அறிந்திருந்தார்.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடகிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருவதை நன்கறிநதிருந்தார். காணிகள் பற்றிய சட்ட அறிவைக் கொண்டிருந்த அவர் நிலம் போனால் எமது அடிப்படை நிலையே போய்விடும் என்பதைப் பலதடவைகள் கூறியும் வந்துள்ளார்.

நிலைமை கட்டுமீறிச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதை தமது அந்திமகாலத்தில் கூறி அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர் நண்பர் தர்மராஜா அவர்கள். பலமுள்ள கொள்கைப் பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் சேர வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்திருந்த காரணத்தால் எனக்கு சார்பாக தம்பி கஜனிடம் சிபார்சு செய்திருப்பார் என்று கூறுகின்றேன்.

கொள்கைப் பற்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நண்பர் தர்மராஜா அறிந்திருந்ததால் கஜனிடமும், கஜனின் தாயாரிடமும், அவர் கட்சி அங்கத்தவர்களிடமும் பேசி நிலைமையை புரிய வைக்கக் கூடிய ஒருவராகவே அவர் இருந்தார். கீரியும் பாம்புமாக இருந்த தமிழ்த் தலைவர்கள் முன்னர் தமிழ் மக்கள் நலம் கருதி ஒன்று சேர்த்ததை அவர் மறந்திருக்கவில்லை. அவரின் மறைவு என்னைப் பலம் இழக்கச் செய்து விட்டது என்று கூறலாம்.

திரு.தர்மராஜா அவர்கள் மனதில் “விஸ்வாசம்” என்பது 100க்கு 100 இருப்பவனே உண்மையான மனிதன் என்ற ஒரு கருத்து ஆழமாக வேரூன்றியிருந்தது. “தமிழர்களின் மிகப் பெரிய குற்றம் என்ன தெரியுமா?” என்று கேட்பார். அது “நன்றி மறந்ததே!” என்பார். “எமக்கு உதவியவர்களின் நன்றி மறந்து நாம் வாழ்ந்து வருவதாலேயே நாங்கள் இன்று இந்த கேவலமான நிலையை அடைந்துள்ளோம”; என்பார்.

“எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு”

என்ற குறளை எடுத்துக் காட்டாகக் கூறி “செய்நன்றி கொன்ற தமிழ் மக்களுக்கு உய்வேயில்லை” என்பார். அவர்களுக்கு உய்வில்லை என்பதால்த்தான் ளுதுஏ “தமிழர்களைத் தெய்வந் தான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார் என்று எடுத்துக் காட்டுவார்.

எமக்கென வாழ்ந்த பல தலைவர்களை, அரசியல்வாதிகளைத் தமிழ் மக்கள் நிராகரித்தமை, மறந்தமை, உதாசீனம் செய்தமை மிகக் கொடிய பாவம் என்று கூறுவார். அவர் வாழ்க்கையில் நன்றி, விஸ்வாசம் என்பன மிக முக்கியமானவையாக இருந்தன. யாராவது அவருக்கு உதவினால் அதற்கு மேலாக அவர் பிரதி உபகாரம் செய்வார்.

நான் சாவகச்சேரிக்கு மாவட்ட நீதிபதியாக சென்ற காலத்திலேயே தர்மராஜா என்றொருவர் இருந்ததை அறிந்திருந்தேன். பிரக்கிராசியாரின் லிகிதர் என்ற முறையில் ஒரு வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் தயார்படுத்தக் கூடியவர் அவர் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவரை நான் அப்போது சந்திக்க வாய்ப்பிருந்ததில்லை.

ஆனால் அவரோ என்னை நிழல் போல தொடர்ந்து எனது ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கி இருந்தார். சட்டத்தரணிகள் என்னைப் பற்றிக் கூறியதை எல்லாம் அவர் தெரிந்து வைத்திருந்தார்.

தம்புசெட்டியைச் சேர்ந்த அட்வகேட் சோமசுந்தரம் என்பவர் எனது மிக நெருங்கிய நண்பர். சட்டத்தாலும், சரித்திரத்தாலும், அரசியலாலும், சமூகவியலாலும், தர்க்கத்தாலும், சமயக் கருத்துக்களாலும், கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களாலும் நாமிருவரும் அறிவு ரீதியாகவும் ஆர்வ ரீதியாகவும் பிணைந்திருந்தோம். என்னை நீதித் துறைக்குள் கொண்டு வந்ததில் அவருக்குப் பெரும் பங்கு இருந்தது. நான் நீதித்துறைக்குள் உள்நுழைய முடியாதென்றேன். என் தொழிலில் நல்ல வருமானம் வருகின்றது என்றேன். சோமா கேட்கவில்லை.

ஒரு நாள் நீதித்துறைக்குள் செல்ல அனுப்ப வேண்டிய விண்ணப்பப் படிவம் ஒன்றை என்னிடம் நீட்டி அதற்குக் கையெழுத்திடு என்றார். நான் முடியாது என்றேன். “நீ கையெழுத்து வைக்காவிட்டால் நான் உன் கையெழுத்தை வைத்து அனுப்புவேன்” என்றார். “நீ உன் நண்பனைக் காட்டிக் கொடுக்க மாட்டாய்” என்றும் கூறினார். நான் கையெழுத்திட்டேன்.

கடைசியில் நீதிபதியாகி சாவகச்சேரி வந்து சேர்ந்தேன். என் முன் திரு.சோமசுந்தரம் அவர்கள் ஒரு விவாகரத்து வழக்கில் ஆஜரானார். அவர் எவ்வளவு சமர்ப்பணங்கள் செய்தும் நான் அவரின் கட்சிக்காரருக்கு எதிராகவே தீர்ப்பளித்தேன். உடனே அவர் மற்றைய சட்டத்தரணிகளுக்குக் கூறினாராம் “சேசே! நான் தவறு செய்து விட்டேன். Frankenstein ஒன்றை உண்டாக்கி விட்டேனே!” என்று கூறினாராம்.

இதை எப்படியோ அறிந்து கொண்டு தர்மராஜா இந்தக் கதையை எனக்குக் கூறுவார். நீங்கள் பக்கச் சார்பில்லாமல் நடந்து கொண்டதால்த்தான் அவ்வாறு சோமா அவர்கள் கூறினார்கள் என்று தனது வியாக்கியானத்தையுந் தந்தார்.

கஜேந்திரகுமார் மீது அவருக்கு அலாதியான பாசமும் மரியாதையும் இருந்தது. “இந்தப்பிள்ளை நல்லதொரு சட்டவல்லுநர் வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளது. அவருக்கு என்னதான் இல்லை? ஏன் தான் கட்சி அரசியலுக்குள் சென்று சீரழிகின்றாரோ தெரியவில்லை” என்று கூறுவார். கஜேந்திரகுமார் தனது தந்தை போல் பாட்டனார் போல சட்டத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் கஜனின் அரசியல் பிடிவாதம் அவருக்கு ஆத்திரத்தை ஊட்டவில்லை. பாசத்தையே கூட்டியது. தொடர்ந்து கஜேந்திரகுமார் அரசியலில் நன்றாகச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நாங்களும் கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து“ என்றார்.