Hot News
Home » செய்திகள் » முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதம் தமிழர்களுக்கும் எதிரானது

முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதம் தமிழர்களுக்கும் எதிரானது

பொதுபல சேனாவினால் கண்டியில் கடந்த ஏழாம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான கூட்டம் தேல்வியில் முடிவடைந்துள்ளது என கட்டுரையாளர் சஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும்,

இந்தக் கூட்டத்திற்கு நாடு பூராகவும் பத்தாயிரம் பௌத்த பிக்குகளும், ஒரு இலட்சம் பொது மக்களும் கலந்து கொள்வார்கள் என்று பொது பல சேனா தெரிவித்திருந்தது.

ஆயினும் அங்கு வந்திருந்த மக்கள் தொகை அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையே கொடுத்து.

ஆயினும் இங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முஸ்லிம் விரேத செயற்பாட்டின் உச்ச கட்டம் எனலாம். அந்த தீர்மானங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தாலும், தமிழர்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றன.

முஸ்லிம்களின் பொருளாதாரம், அரசியல், மத உரிமைகள் என எல்லாவற்றிலும் இனவாதிகள் தலையீடுகளை செய்து முஸ்லிம்களுக்கு மூக்கனாங்கயிறு கட்டுவதற்கு எண்ணுகின்றார்கள்.

முஸ்லிம்களின் மீதான இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று இப்போதைக்கு தெரிவித்துக் கொண்டாலும், அடிப்படையில் முஸ்லிம்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியன்றி வேறில்லை.

முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாத தேரர்களும், அரசியல்வாதிகளும் இன்று நேற்று முதல் காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே ஏற்பட்டதாகும்.

1815ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க ணே்டுமென்ற திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இந்த வன்செயலின் பின்னணியில் இலங்கையின் முக்கிய சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்பட்டிருந்தார்கள். இவர்களின் இந்த வன்செயல் நடவடிக்கைக்காக பிரித்தானிய அரசாங்கம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள அரசாங்கம்

பொது பல சேனாவின் கூட்டத்தில் சிங்கள அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சிங்கள அரசாங்கத்தை அமைக்காது போனால் துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை தனிச் சிங்கள தேசமாகவும் மாற்ற வேண்டும். 1815ஆம் ஆண்டு சிங்கள இராஜதானிகளுக்கும், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற உடன்படிக்கை மூலமாக பறிக்கப்பட்ட சிங்களவர்களின் உரிமைகளை மீளப் பெற வேண்டும்.

சிங்கள மொழி பேசும் மக்களை திரட்டி பலமிக்க சமூகமொன்றினை உருவாக்க ணே்டும் என்றும் அக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையை தனிச் சிங்கள தேசமாக மாற்ற வேண்டுமென்பது மிகப் பெரிய இனவாதமாகும். ஏனைய இனங்களின் உரிமைகளையும், அரசியல் அதிகாரத்தையும், சுய நிர்ணய உரிமையையும் மறுதலிக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது.

இன்றும் கூட அரசாங்கம் சிங்களவர்களின் நலன்களைப் பேணும் வகையிலும், ஏனைய சமூகங்களின் நலன்களை பேணுவதில் அசமந்த நிலைப்பாட்டையும் கொண்டதாகவே இருக்கின்றது. இதனால் தான் சிறுபான்மையினர் உரிமைக் கோஷங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் சிங்கள அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்பது இன்று இருக்கின்ற சிங்கள அரசாங்கத்தை விடவும் மோசமாக சிறுபான்மையினரை நடத்தக்கூடிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு விரும்புகின்றார்கள்.

மேலும், சிங்கள தேசமாக மாற்ற வேண்டும் என்பதன் மூலமாக இங்கு ஏனைய இனங்களின் வாழ்விடம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இருக்கின்றது.

நாட்டில் அவசர காலச்சட்டம் உள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை பிரகடனமாக வெளியிடும் கூட்டத்தை நடத்துவதற்கு அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை மூலமாக பொது பல சேனாவின் கூட்டத்திற்கு ஆட்சியாளர்களின் அனுசரணை இருக்கின்றதென்பது உறுதியாகின்றது.

உலமா சபையுடன் பேசக் கூடாது

அரசாங்கமும், அரச அதிகாரிகளும் இலங்கை உலமா சபையுடன் பேசக் கூடாது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கண்டி கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

ஹலால் உணவுகளை தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் எடுத்துள்ளார்கள். முஸ்லிம்களை வழி நடத்துகின்ற பொறுப்பு முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும், அவர்கள் அங்கம் வகிக்கும் உலமா சபைக்கும் இருக்கின்றது. அது போன்று முஸ்லிம்களின் ஏனைய தலைவர்களுக்கும் அத்தகைய பொறுப்பு இருக்கின்றது.

அந்த வகையில் உலமா சபையோடு அரசாங்கமும், அதிகாரிகளும் பேசக்கூடாதென்று கட்டளையிடுவதற்கு பொது பல சேனாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

அது போலவே ஹலால் உணவை தடை செய்வதற்கு பொது பல சேனாவுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் முடியாது. ஒருவரின் உணவுத் தெரிவு என்பது அடிப்படை உரிமையாகும்.

இந்த நாட்டில் பொதுவான சட்டங்கள் அரசியல் யாப்பு மூலமாக இருக்கின்றன. அதேவேளை தனியார் சட்டங்களும் இருக்கின்றன. முஸ்லிம் தனியார் சட்டம் இருப்பதனை போன்று கண்டிய சட்டம், தேச வழமைச் சட்டம், முக்குவர் சட்டம் என்றும் சட்டங்கள் உள்ளன.

ஆயினும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் தடை செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்படுவதானது முஸ்லிம் விரோத செயற்பாடாகும். மேலும் இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்தான பிரச்சினையை தீர்க்கும் அதிகாரத்தை பௌத்த தேரர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மட்டுமன்றி பௌத்த, இந்து, சிறிஸ்தவ அடிப்படைவாதங்களும் உள்ளன. இந்த அடிப்படைவாதங்கள் நாட்டின் பொது அமைதிக்கும், சட்டத்திற்கும் மாறாக செயற்படுமாயின் அதனை கட்டுப்படுத்துவதற்கும், சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் இருக்கின்றது.

ஆனால் பௌத்த தேரர்களுக்கு அதிகாரம் தரப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பது அரசியல் யாப்புக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். இனவாதிகளும், இனவாத தேரர்களும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

சட்டமும், ஒழுங்கும், நிறைவேற்று அதிகாரமும், அராசங்கமும் இனவாதிகளுக்கும், இனவாத தேரர்களுக்கும் முன்னால் அடங்கி இருக்கின்ற நிலையில் மேலும் அதிகாரத்தை தர வேண்டும் என்நு கேட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டை சுடுகாடாக மாற்றுவதற்காக வேண்டி நிற்கும் அனுமதியாகும்.

தீர்மானங்கள்

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி பொது பல சேனாவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போர்ப் பிரகடனத்திற்கு ஒப்பானதென்று தெரிவித்துள்ளார்.

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக தண்டனை பெற்று சிறையில் இருந்த வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.

ஆனால் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்ட நாள் முதல் தமது முஸ்லிம் விரோத செயற்பாட்டை மீண்டும் கையில் எடுத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவரினால் ஏற்படும் எதிர்விளைவுகளை ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.

இதேவேளை பொது பல சேனாவின் கண்டிக் கூட்டம் தோல்வி அடைந்ததனால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கியவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது.

பௌத்த இனவாதத்தை முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரயோகித்து சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்று திட்டமிட்டவர்களுக்கு கண்டிக் கூட்டம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இனவாதம் பேசி சிங்கள மக்களின் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாமென்று போட்ட கணக்கு பிழைத்துப் போயுள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்று அலட்சியமாகப் பேசியவர்களை நிலைகுலைய செய்துள்ளது.

சிறுபான்மையினரின் ஆதரவும் இருந்தால் தான் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற நிலைக்கு வந்துள்ளார்கள்.

இதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாத்திரமே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த முடியுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூட ஞானசார தேரருக்கு எதிராக கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அதாவது ஞானசார தேரர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னதாக அவரது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், அவர் ஒரு சிங்கள இனவாதி.

ஞானசார தேரரின் கடந்த கால நடவடிக்கைகள் சிங்கள அடிப்படைவாதம் அல்லது இனவாதத்தை தூண்டும் வகையிலே இருந்து வந்துள்ளன.

அப்படியானவருக்கு எதிராக செயற்படத் தகுதி இருக்கிறதா என்பதே எமது கேள்வியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தேரர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்தாலும் அதனையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அக்கறை கொள்வதில்லை.

முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளின் மூலமாக எவ்வாறு அரசியல் இலாபம் அடைந்து கொள்ளலாமென்றே சிந்திக்கின்றார்கள். ஜனாதிபதி, ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி இனவாதிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இனவாதிகளின் கருத்துக்களினால் முஸ்லிம்களிடையே ஏற்படும் அதிருப்தியை பயன்படுத்தி கொண்டு முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு பிரதமர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆனால் இவர்கள் இருவரும் இனவாதிகளின் செயற்பாடுகளை கண்டிக்கவில்லை. சட்டத்தை முறையாக அமுல்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இதேவேளை எமது ஆட்சி ஏற்படுத்தப்படால் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்று பொது எதிரணியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ முதல் விமல் வீரவன்ச வரை தெரிவித்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கொடுமைகள் இனவாதக் கருத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போதே தீவிரமடைந்தது. இக்காலப் பகுதியில் தான் பௌத்த இனவாத அமைப்புகளுக்கு ஆதரவும், அரவணைப்பும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.

அன்றைய ஆட்சியில் அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இனவாத அமைப்புகளுக்கு மேலதிக சக்தியை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

குற்றச்சாட்டுக்கள்

இதேவேளை அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பொளத்த இனவாதத் தேரர்களும், இனவாதிகளும் முன்வைத்துக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று நாட்டு மக்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் இனவாதிகள் மற்றும் தேரர்களின் கருத்துகள் உண்மை என்று ஆதரவாகச் செயற்பட்டவர்கள் தற்போது எதிராக செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட தேரர்களும், இனவாதிகளும் கொதிப்படைந்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண சபையின் ஆளுநராக செயற்பட்ட அசாத் சாலி ஆகியோர்களுக்கும், ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களுக்கும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களுடன் தொடர்புள்ளதென்று குற்றச்சாட்டுகளை கூட்டு எதிரணியினரும், அத்துரலியே ரதன தேரரும், இன்னும் சில இனவாதிகளும் முன்வைத்தார்கள்.

அதேபோன்று வைத்தியர் சிஹாப்தீன் சாபி சிங்கள பெண்களுக்கு அவர்களின் சம்மதமில்லாது கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தர்கள்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு பொலிஸ் அதிகாரி முதல் வேறு அதிகாரிகளும் துணையாகச் செயற்பாட்டார்கள். தற்போது இக்குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்று குற்றப்புலனாய்வு பொலிஸார் அறிக்கைகளை வழங்கியுள்ளார்கள்.

இதனால் அரசியல் இலாபத்திற்காக மக்களை குழப்பி நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கும், வன்முறைகள் ஏற்படுதவற்கும் இவர்கள் காரணமாக இருந்துள்ளார்கள் என்று பெரும்பான்மை சிங்கள மக்களே பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் பொது பல சேனாவின் கூட்டத்திற்கு எதிர்பார்த்த மக்கள் வரவு இல்லாமைக்கு காரணமாகும். இனவாதிகளினால் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் உள்ள பொய்யை தெளிப்படுத்த வேண்டும்.

இப்போதைக்கு நகரப்புற சிங்கள மக்களே இனவாதத்தின் கோர முகத்தை புரிந்துள்ளார்கள். ஆனால் கிராமப் புறங்களில் உள்ள சிங்கள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெளிவு ஏற்படவில்லை.

அவர்கள் இனவாத தேரர்களின் கருத்துக்களையே நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். கிராம புற சிங்கள மக்களுக்கு முஸ்லிம்களைப் பற்றிய தெளிவையும், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, அரசியல் தேவைக்காக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரம் என்பதனையும் தெளிப்புடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முஸ்லிம் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.