Hot News
Home » செய்திகள் » வீட்டுத் திட்டம் வழங்கியதில் பாரிய முறைகேடு; ரிஷாட் மீது குற்றச்சாட்டு

வீட்டுத் திட்டம் வழங்கியதில் பாரிய முறைகேடு; ரிஷாட் மீது குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்களுக்குரிய, நீண்ட காலம் இடம் பெயர்ந்தவர்களுக்கான வீட்டுத் திட்டம் வழங்குவதில் பாரிய முறைகேடு இடம் பெற்றிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த நீண்டகாலம் இடம் பெயர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கும் அமைச்சுக்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமே குறித்த வீட்டுத்திட்டங்களை வழங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 13.07.2019அன்று ஹிச்சிராபுரம், நீராவிப்பிட்டி பகுதிகளில் நீண்டகாலம் இடம்பெயர்ந்து வாழுகின்ற, மக்களுக்கான வீட்டுத்திட்டம் 160 பேருக்கு வழங்கப்பட்டது.

அந்த வீட்டுத்திட்டத்திலே அனைத்துத் தகுதிகளும் இருந்த 20 பயனாளிகளின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுகின்றது.

இவ்வீட்டுத்திட்டமானது, குறித்த பிரதேசங்களில் நிரந்தரமாக வசிப்பவர்குக்கே வழங்கப்படும் எனவும், தனி நபருக்கு வீடு வழங்கமாட்டோம் என தெரிவிக்கப்பட்டது, முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் பதிவு செய்திருப்பவர்களுக்குத்தான் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டபோதிலும், நீராவிப்பிட்டி ஹிச்சிராபுரம் பகுதிகளில் நிரந்தரமாக வசிக்காத, முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் பதிவு இல்லாதவர்களுக்கு, தனி நபர்களுக்கு ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டவர்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப் பட்டுள்ளனர். காணி இல்லாதவர்களுக்கு வீட்டுத் திட்டத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இவ்வீட்டுத் திட்ட விடயத்தில் பல மோசடிகள் இடம் பெற்றுள்ளன.

நீண்டகாலம் இடம்பெயர்ந்து பல்வேறுபட்ட இன்னல்ளுடன் இருக்கும் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர். இவ்வீட்டுத் திட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பெயர்கள், மிகவும் வறுமைப்பட்டு நீண்டகாலமாக குடிசைகளில் வாழ்கின்ற மக்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் இதனை விட நீண்டகாலம் இடம் பெயர்ந்தவர்களுக்காக வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகளும் ரிசாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட தயாராக இருக்கின்றது.

இது தொடர்பில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

எனவே உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும் என பாதிககப்பட்ட மக்கள் தெரிவித்தர்.