Hot News
Home » செய்திகள் » தேர்தல் ஆணையம் கோட்டாவை விசாரணை செய்யுமாறு கோரிக்கை

தேர்தல் ஆணையம் கோட்டாவை விசாரணை செய்யுமாறு கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ஷ மீதான வாக்காளர் இடாப்பு பதிவு குற்றச்சாட்டுகள் தேர்தல் நடைமுறையில் பாரதூரமான சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், இக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரைவான பக்கச் சார்பற்ற விசாரணையொன்றை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) கூறியுள்ளது. தேர்தல் நடைமுறையில் வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தேர்தல் ஆணையகம் இவ்வாறான நடவடிக்கையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கருதுவதாக மேற்படி அமைப்பு மேலும் கூறியுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சிங்கள தினசரி பத்திரிகையொன்றின் துணை ஆசிரியர் ஒருவர் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

2005 ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வருடாந்த தேர்தல் இடாப்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப் பட்டிருந்ததாகவும், அவர் அப்போது இலங்கை பிரஜையாக இல்லாதிருந்த நிலையில் அத்தேர்தலில் அவர் வாக்களித்திருந்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ மீதான மேற்படி முறைப்பாடு தொடர்பாக முறையான சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மேற்படி முறைப்பாட்டை செய்துள்ள சிங்கள பத்திரிகையின் துணை ஆசிரியர் தேர்தல் ஆணையகத்தை கேட்டிருக்கிறார். 

இலங்கை அரசியலமைப்பின் 89 (a) அரசியலமைப்பு சட்டங்களின் பிரகாரம் இலங்கை பிரஜையாக அல்லாத ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் அல்லது பொதுத் தேர்தலில் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் வாக்களிக்க முடியாது. அவ்வாறு வாக்களிப்பது குற்றமாகும். 

1981இன் 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஊடக அறிக்கைகளின்படி கோட்டாபய ராஜபக்ஷ அவரது அமெரிக்க குடியுரிமையை 2003ல் பெற்றுக் கொண்டார். 2005 செப்டம்பர் 4ம் திகதி அமெரிக்காவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த அவர் 2005 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

1948இன் 20ம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45 (1) (a) பிரிவின்படி இது ஒரு குற்றச் செயலாகும். 

மேற்படி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அது இலங்கை அரசியலமைப்பையும் இலங்கையின் சட்டங்களையும் பாரதூரமாக மீறும் ஒரு செயலாக அமையும். இலங்கையின் 8வது ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனது இரட்டை பிரஜாவுரிமையை இன்னும் துறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இலங்கையில் தேர்தலொன்றில் வாக்களிக்கும் நடைமுறை அரிசயலமைப்பின் பிரகாரம் தேர்தல் ஆணையாளருக்கு பொறுப்பளிக்கப்பட்ட பணிப்பாணை ஆகும். 

தேர்தல் இடாப்பில் இடம்பெறும் உறுதிப் படுத்தப்பட்ட தகவலின் படி தகுதி பெற்ற வாக்காளர் தேர்தலில் வாக்களிப்பதால் மட்டுமே சுதந்திரமும் நியாயமுமான தேர்தலுக்கு வழி வகுக்க முடியும்.