Hot News
Home » செய்திகள் » அவதூறான செய்தி வெளியிட்ட இணையத்தளத்துக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

அவதூறான செய்தி வெளியிட்ட இணையத்தளத்துக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அவதூறான செய்தி வெளியிட்ட இணையத்தளத்துக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் முறைப்பாடு செய்துள்ளார்.

jvpnews.com என்ற குறித்த இணையத்தளம் செல்வம் எம்.பி பல கோடி ரூபா பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை வெளியிட்டமை தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (23) முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்

இது தன் மீதான தனிப்பட்ட காழ்ப்பின் பேரில் அவதூறு பரப்பும் நோக்கில் பரப்பட்ட ஆதாரமற்ற வதந்தி என செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் மறுப்பறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரமற்ற செய்தியினை வெளியிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்குமான வழக்குத் தொடர்தலின் முதற்கட்டமாக இன்றையதினம் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. அவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இதனுடன் தொடர்புடையவர்களை இன்ரபோல் ஊடாக கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குற்றப்
புலனாய்வுத் திணைகள விசாரணைப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இணையத்தளங்களை நடாத்தும் நபர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கும் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும்  செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களை புலம்பெயர் நாடுகளில் இருந்து நடத்தும் பண முதலைகள்  இராணுவ புலனாய்வுத் துறையினரின் போஷிப்பில் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வருகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதளுக்கெதிராக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களின் விசமத்தனமான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும்.