Hot News
Home » செய்திகள் » டிசம்பரில் சஜித் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்வது உறுதி

டிசம்பரில் சஜித் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்வது உறுதி

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக டிசம்பர் மாதம் உறுதியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வாரென நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுத் (23) தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது,

1994ஆம் ஆண்டு முதல் மாத்தறையில் நான் வரவேற்புக் கூட்டங்களை நடத்துகின்றேன். 1994இல் சந்திரிகாவுக்கும் 2004 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் 2015 இல் ரணில், மைத்திரிக்கும் வரவேற்பளித்தோம். ஆனால், இவ்வாறு பாரிய மக்கள் வெள்ளத்தை நாம் காணவில்லை.

நான்கு வருடங்களில் என்ன செய்தோமென கேட்கின்றனர். இந்த நான்கு வருடத்தில் பாரிய பணிகளை நாம் முன்னெடுத்துள்ளோம். ஜனநாயகம், நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்தியை கட்டியெழுப்பியுள்ளோம். இவை அனைத்தையும் விட சுதந்திரமாக எழுத்தவும், நடமாடவும், கருத்துகளைக் கூறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். உலகத்தை மீண்டும் வெற்றி கொண்டுள்ளோம். இருள் சூழ்ந்த உலகத்தில் இருந்து நாம் விடுபட்டுள்ளோம்.

ஜீ.எஸ்.பி சலுகை மீண்டும் கிடைத்தது. தெற்கிலிருந்து மீண்டும் உலகுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் யுகத்தை ஏற்படுத்தியுள்ளோம். 2015 இல் நாம் இந்தப் பயணத்தை ராஜபக்ஷவின் கடன் சுமையை தலையில் சுமந்துக்கொண்டுதான் ஆரம்பித்தோம். பாரிய கடனை செலுத்தும் அதேவேளை, பரந்தப்பட்ட அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளோம்.

அமைச்சர் சஜித் தமது தந்தையின் சாதனையையும் முறியடித்துள்ளார். 259 கிராமங்களை இதுவரை அமைத்துள்ளார். பாதைகள், வீடுகள் அமைக்கும் போது கோட்டாபய போன்று அச்சுறுத்தல் விடுத்து நாம் இடங்களை கைப்பற்றவில்லை. இழப்பீடு கொடுத்தே அனைத்துப் பணிகளையும் செய்கின்றோம். கோட்டாபயவின் காலத்தில் விரட்டப்பட்டவர்களுக்கும் நாம் இழப்பீடு வழங்கினோம். கம்பெரலிய வேலைத்திட்டத்தில் மக்களுக்கு என்றும் இல்லாத வகையில் அவிருத்தி செய்துள்ளோம்.

எதிர்வரும் டீசம்பர் மாதம் சஜித் பிரேமதாஸ கட்டாயம் இந்த நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்பார். அவர் இன்று இந்தக் கூட்டத்திற்கு வருகைத்தந்தபோது “வெல்கம் டு பிரசிடன் மாத்தறை” எனக் கூறிதான் வரவேற்றேன்.

கடந்த 17 வருடங்களாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் இந்தக் கட்சியை பாதுகாத்து வந்தார். தற்போது எமது கட்சி அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகிறது. 2020, 2025க்கு நாட்டை கொண்டுசெல்ல கூடிய தலைவராக சஜித் பிரேமதாஸவே இருக்கிறார். எனக்கு சஜித் பிரேமதாஸவுடன் பிரச்சினைகள் இருந்தன. ஆனால், நிதி அமைச்சராக நான் பார்ப்பதாவது, திறைசேரியிலிருந்து நிதியை ஒதுக்கும் போது கொள்ளையடிக்காது அபிவிருத்தியை முன்னெடுத்த ஒருவராக சஜித் பிரேமதாஸ உள்ளார்.

குறுகிய காலத்தில் கட்சியாக ஒன்றிணைந்து ரணில், கருவின் ஆதரவில் சஜித் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயம் 65 சதவீதமான வாக்குகளைப் பெற்று சந்திரிகாவின் சாதனையும் முறியடிப்போம் என்றார்.