Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்: சமூகத்துக்கு அனுகூலமா, பிரதிகூலமா?

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்: சமூகத்துக்கு அனுகூலமா, பிரதிகூலமா?

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் ஜனாதிபதி வேட்பாளர் எண்ணக்கரு வெற்றி பெறுமா என்கிற கேள்வி அரசியல் அரங்கில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த எண்ணக்கருவை முன்வைத்து கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம்கள், பெரும்பான்மை சமூகத்தினர் அதே போல் சகமொழியை பேசும் தமிழ் மக்கள் என பலரிடமும் அபிப்பிராயத்தினை பெற்றுக் கொள்ளும் முயற்சியினையும் முடுக்கி விட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னரான முஸ்லிம்களின் இருப்பு, அவர்களின் மத சுதந்திரம் மற்றும் இன்னோரன்ன விடயங்களில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில், இப்படியான கருத்து என்ன இடத்தில் வைத்துப் பார்க்கப்படும் என்கிற விடயமே இங்கு முக்கியமானது.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக ஆட்சியாளர்களிடத்தில் நம்பிக்கை இருந்தது. ஆனால் பயங்கரவாத சிந்தனையில் ஊறிப் போன ஒருசில முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் எல்லாவற்றினையும் தவிடுபொடியாக்கியது என்றே சொல்லலாம்.

விடயம் இவ்வாறிருக்க, முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறங்குதல் என்பது எந்தளவு சாத்தியம், அதன் பெறுமானம் என்ன? அதன் பின்னரான அரசியல் கலநி​ைலவரம் எப்படி அமையும் என்கிற கேள்விக்கு பதிலளிப்பது மிக முக்கியமாகும்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதனையும் தாண்டி ஆட்சியில் பங்கெடுத்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அமைச்சுப் பதவிகள், ஆளுநர் பதவிகள் வரை வலிந்து பறித்தெடுக்கப்பட்டன. இந்த நிலையினைப் பார்க்கின்ற போது எதிர்வரும் தேர்தல் களம் என்னவகையான செய்தியை முஸ்லிம்களுக்குச் சொல்லப் போகின்றது என்பது முக்கியம்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதிப் பதவிக்கு வர முடியாது. அப்படி இருக்கின்ற போது முஸ்லிம் சமூகத்தில் இருந்து எழுகின்ற இந்த எண்ணக்கருவுக்கு எப்படியான வடிவம் கொடுக்கப்படும் என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள ஒரு விடயம் பேசுபொருளாக இப்போது உள்ளது. சிறுபான்மைச் சமூகத்தின் அபிலாசைகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை என்றே சொல்லுதல் வேண்டும்.

அரசியலமைப்பில் 94 (1) (அ)இல் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து இரண்டாவது ஆளாக யாரை விரும்புகின்றார் என்பதையும் தெரிவிக்கலாம் அத்துடன் (ஆ)அத்தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கின்றவிடத்து, இரண்டாவது ஆளாகவும், மூன்றாவது ஆளாகவும் யார் யாரை விரும்புகின்றார் என்பதனையும் தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

அரசியலமைப்பின் 94(2)இல் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர், அப்படிப் பெறுகின்ற ஒருவர் இருந்தால் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என வெளிப்படுத்துதல் வேண்டும். 94 (3) ( அ)இல் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியிலிருந்து நீக்கி விடப்பட்ட ஒரு வேட்பாளருக்கு தமது வாக்கை அளித்துள்ள ஒவ்வொரு வாக்காளரதும் இரண்டாவது விருப்பத் தெரிவானது எஞ்சியுள்ள இரண்டு வேட்பாளர்களுள் யாதேனுமொருவர்க்கானதாக இருப்பின், அது அந்த வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்காக எண்ணப்படுதலும் வேண்டும். அத்துடன் (2)ஆம் பந்தியின் கீழ் எண்ணப்பட்ட அவருக்குரிய வாக்குகளுடன் அது சேர்க்கப்படுதலும் வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள விடயமே இப்போது பேசுபொருளாக மாறிப் போயுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் களம் மூன்று அல்லது நான்கு பிரதான வேட்பாளர்களைக் கொண்டதாக அமையப் போகின்ற சந்தர்ப்பம் ஒன்றில் முஸ்லிம்கள் தங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவின் ஊடாக அரசியல் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ள முயலுதல் என்பது பொருத்தமானதாகவே அமையப் பெறும்.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான முயற்சிகளை கட்சிகள் முடுக்கி விட்டுள்ள நிலையில் இரண்டு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இன்னும் இரண்டு கட்சிகள் (ஐ.தே.கட்சி, ஸ்ரீ.ல.சு.கட்சி) தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதில் ஸ்ரீ.ல.சு.கட்சி என்ன நிலைப்பாடு என்பதனை இதுவரை அறிவிக்கவில்லை. ஐ.தே.கட்சியின் வேட்பாளரை பொறுத்தே ஸ்ரீ.ல.சு.கட்சியின் நிலைப்பாடு அமையும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்த நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் யாரும் அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது என்பது கடந்தகால தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டியுள்ளன. இந்த நிலையிலே முஸ்லிம் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை களமிறக்கி அதனூடான ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களில் 25வீதமான வாக்குகளையாவது அளிக்கச் செய்து ஒரு தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் வழிமுறை பற்றி சிந்திப்பது பொருத்தமானதே. அத்துடன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளும் இங்கு கவனத்திற் கொள்ளப்படுதல் அவசியம்.

எப்போதுமே வெல்லுகின்ற குதிரைக்கே பந்தயம் கட்டுதல் வேண்டும். தோற்கின்ற குதிரைக்கு பந்தயம் கட்டுவதனால் ஏற்படுகின்ற இழப்புகள் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படித்தான் முஸ்லிம் தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்கான பொதுவான முடிவு எட்டப்படுமாகவிருந்தால் சிங்கள சமூகத்தின் ஆதரவுத் தளம் எந்த வேட்பாளருக்கு அதிகமிருக்கின்றது என்பதனை கவனத்திற் கொண்டு முஸ்லிம் தரப்பு தமது இரண்டாவது தெரிவினை அளிப்பது மிக அவசியம்.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் என்பது முஸ்லிம்களை சூழ்நிலைக் கைதியாக்கியது. அதனால் எந்த தரப்புடனும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே தலைவர்கள் வழிநடத்தப்பட்டனர். ஆனால் அதன் பிற்பாடான நிகழ்வுகள் வாக்களித்த சமூகத்துக்கு சாதகமானதாக இருக்கவில்லை. எனவே இப்போதுள்ள தேவை முஸ்லிம் மக்களுக்குள்ள ஆபத்துக்களை குறைக்க வேண்டிய தேவையே முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு முன்னுள்ள சவாலாகும். ஆக, முஸ்லிம் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை களமிறக்கி அதனூடாக தமது அபிலாஷைகளை வெல்லக் கூடிய தரப்பொன்றுக்கு தமது இரண்டாம் தெரிவினை அளிப்பது காலத்தின் கட்டாயமென்கின்றனர் சிலர்.

அதற்கும் அப்பால் முஸ்லிம் தரப்பிலிருந்து வேட்பாளர் ஒருவரை களமிறக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு மிகச் சவாலானதே. அங்குள்ள மக்கள் தாங்கள் வாழ்கின்ற சூழலில் இணங்கி வாழ்கின்ற பெரும்பான்மை மக்களின் ஆதரவினை மையப்படுத்தியே அமைதல் அவசியம். அதுவல்லாமல் முஸ்லிம் கட்சிகள் தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை கொண்டு சென்று அரசியல் செய்வதுக்கு முற்படுதல் ஆபத்தானது என்பதனை புரிந்து கொள்ளுதல் அவசியம்.

வெறும் உணர்ச்சிகளை மையப்படுத்திய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள், கட்சி அரசியல்கள் எல்லாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் புறந்தள்ளி வைக்கப்படுதல் வேண்டும். இலங்கை தேசத்தில் முஸ்லிம் தரப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சம், மத சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப் போகின்ற நிலைகள் இல்லாமல் செய்யப்படுதல் அவசியம்.

அப்படித்தான் முஸ்லிம் தரப்பு தங்களது வேட்பாளர்களை களமிறக்கும் நிலை ஏற்பட்டால் முஸ்லிம் தரப்பிலுள்ள கட்சிகளின் வகிபங்கு என்ன என்கிற கேள்வி எழுகிறது. அந்தந்த கட்சிகள் தங்களது கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரலை தவிர்த்து பொதுவான ஒரு கருத்தியல் நிலைக்கு தள்ளப்படுவார்களா? அல்லது முஸ்லிம் மக்கள் கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அடிமையாவார்களா என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

எனவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சிந்தனையில் உருப்பெற்றுள்ள முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற கருத்தியல் நிலை வலுப்பெறுமா அல்லது இல்லையா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. இதன் சாதக,பாதக அம்சங்களை முஸ்லிம்கள் ஆராய வேண்டிய தருணம் இது.