Hot News
Home » செய்திகள் » கட்சியின் முடிவுக்கு கட்சியின் போராளிகள் நிச்சயமாக கட்டுப்பட வேண்டும்

கட்சியின் முடிவுக்கு கட்சியின் போராளிகள் நிச்சயமாக கட்டுப்பட வேண்டும்

மொட்டுக்கட்சியின் கூலிப்படைகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனத் தெரிவித்த மு.கா தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இந்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்ட இனவாதிகள் எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்ட பின்புதான் எமது கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்தோம். இந்த முடிவுக்கு கட்சியின் போராளிகள் நிச்சயமாக கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து புத்தளம் நகரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, கொழும்பு குப்பை விவகாரம் இன்று ஒரு தேசிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்த பேசிய போது எமது கட்சியின் புத்தளம் நகர சபை தலைவர் பாயிஸூடன் இந்த குப்பை விவகாரம் தொடர்பில் நீங்கள் தொலைபேசியில் பேசியதாக அவர் என்னிடம் சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக நான் வியாழக்கிழமை புத்தளத்திற்கு செல்ல இருப்பதால் இதற்கு ஒருதீர்க்கமான முடிவை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினேன்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொன் கணக்கில் புத்தளத்தில் கொட்டுவது என்பது அந்த மக்களுக்கு செய்யும் பாரிய அநீதி என்றும் சுட்டிக்காட்டினேன்.

இந்த குப்பை விவகாரம் பெரும் பிரச்சினையாக காணப்படுவதால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவுகளை அமைத்து இந்த குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

எனவே, நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் புத்தளம் குப்பை விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தி அந்த மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன் என்றும் தன்மீது நம்பிக்கை வைக்குமாறும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என்னிடம் தெரிவித்தார்.

இந்த குப்பை விவகாரம் தொடர்பில் நானும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சரவையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கடும் வாக்குவாதப்பட்டிருக்கிறோம். அவருடன் பேசி உடன்பாடு காணப்படவில்லை. முரண்பாடுகளே அதிகமாக இருந்தது. அவருடைய சர்வதகாரப் போக்குக்கு எங்களால் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் மிகத் தெளிவாகவும் அரசாங்கத்திற்கு சொல்லியிருக்கிறோம்.

ஒரு தனிமனிதனாக இருந்துகொண்டு, ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு முழு அரசாங்கத்தையும் கைக்குள் போட்டுக்கொண்டு குப்பை விவகாரத்தை கடும் போக்குடன் கையாள்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவருடைய பாரளுமன்ற உறுப்பினர்களை விட, எமது முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகைத்தது என்பதை காட்டி அதன்மூலம்தான் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.

அதுமாத்திரமின்றி, தற்போது கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு புத்தளத்திற்கு ஒவ்வொரு நாளும் பயணிக்கின்ற டிப்பர் வண்டிகளையாவது தேர்தல் முடியும்வரை மேயர் ரோசி சேனநாயக்கவுடன் பேசி அதனை புத்தளத்திற்கு கொண்டு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு சொல்லியிருக்கிறேன்.

எனவே, இந்த குப்பை விவகாரம் தொடர்பில் உதாசீனம் செய்யாமல் எங்களுடைய பொறுப்பு என்று கவனத்தில் எடுத்து இதற்கு ஒரு நிரந்தர முடிவுகாண வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த நாட்டில் வாழும் சிறபான்மை மக்களுக்கு மிகவும் சோதனை மிகுந்த காலமாகும். இன்று பல குழுக்கள் வருகை தந்து முஸ்லிம் மக்களின் அவதானங்களை திசை திருப்புவதை நாம் பார்க்கிறோம்.

முஸ்லிம் மக்களையும், கிறிஸ்தவ மக்களையும் மோதவிட்டு அதன்மூலம் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர எடுத்த முதல் முயற்சிதான் ஏப்ரல் தாக்குதலாகும். இதனால் முஸ்லிம் சமூகத்தின் மீது சேறுபூசும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கூலிப்படைகளை வைத்து மிகவும் கச்சிதமாக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தினார்கள்.

இந்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களின் மனங்கள் நோகடித்தார்கள். கஷ்டத்திற்குள் உள்ளாக்கினார்கள். முஸ்லிம் சமூத்தை இழிவுபடுத்தி, எமது சமூகத்தை கஷ்டத்திற்குள் தள்ளிவிட்டு, முஸ்லிம் தலைவர்களை பயங்கரவாதிகளாக ஒவ்வொரு நாளும் செய்திகள் மூலம் ஒளிபரப்பிய ஒருசில ஊடகங்கள் இன்று எந்த தரப்பினரை ஆதரிக்கிறார்கள் என்றும் நாங்கள் பார்க்க வேண்டும். அவ்வாறானவர்களுக்கு எமது வாக்குகளை எப்படி வழங்குவது.

ஏப்ரல் தாக்குதலின் பின்னர் இரண்டு ஆளுநர்களும், அமைச்சர் ஒருவரும் தாக்குதலுக்கு துணைபோனவர்கள் என்று ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இதனால் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தேரர்கள் உண்ணாவிரதம்; இருந்த போது, அந்த உண்ணாவிரத்திற்கு ஞானசார தேரும் சென்று அதற்கு மேலும் வலிமை சேர்த்தார்.

அதுமாத்திரமின்றி, குறித்த இரண்டு ஆளுநர்களும், அமைச்சரும் இராஜினாமா செய்யாவிட்டால் நாட்டில் கலவரம் உண்டாகும் என்ற தொனியில் மறைமுகமாக கருத்துக்களை வெளியிட்டார்.

எனவே, அதனால் வரப்போகின்ற ஆபத்தை நாம் கண்டதனால்தான் அரசாங்கத்தில் உள்ள அத்தனை அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்தோம்.

அதனால்தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த முஸ்லிம் சமூகத்திற்கும், முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக செயற்பட்ட இனவாதிகள் எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்று நாங்கள் முதலில் அடையாளம் கண்டோம். கடந்த கால ஆட்சியாளர்களின் மீள்வருகை எமக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனையும் கவனத்தில் கொண்டுதான் எமது கட்சிஒரு தீர்க்கமான முடிவை எடுத்தது. இந்த நாட்டின் சுபீட்சத்திற்கும், அரசியல் நெறிமுறையிலும் மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்தோம்.

அத்துடன், இரண்டாவது வாக்கை சஜித்துக்கு வழங்குவது சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தி இயக்கத்திற்கு ஆதரவு வழங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் சில தினங்களுக்கு முன்னர் என்னை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும் என்று நண்பர் ஒருவர் மூலம் அனுமதி கேட்டிருந்தார். அப்போது நான் சொன்னேன் முதலாவது வாக்கு பற்றி பேசுவது என்றால் வருமாறும் இரண்டாவது வாக்கு பற்றிய பேச்சுக்கே இடமில்லை இல்லை என்று நான் அந்த நண்பரிடம் பதில் கூறினேன்.

இரண்டாவது வாக்கு என்பது சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்கான வியூகமே தவிர அதில் எவ்வித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை. இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதை விட அந்த வாக்கை கோட்டாபயவுக்கே வழங்கலாம். எனவே, இவர்கள் எல்லாம் மொட்டுக்கட்சியின் கூலிப்படைகளாகவே நாம் பார்க்கிறோம் என்றார்.

Author: TELO Admin