Hot News
Home » செய்திகள் » தமிழர்களை நசுக்கிய ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் ஆட்சியை கொடுக்கப் போகின்றீர்களா : சுமந்திரன் கேள்வி

தமிழர்களை நசுக்கிய ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் ஆட்சியை கொடுக்கப் போகின்றீர்களா : சுமந்திரன் கேள்வி

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தவர்த்துக்கொண்டால் வெற்றிபெறப்போவது கோத்தாபய ராஜபக்ஷவே எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழர்கள் வாக்களிக்காது  தமிழ் மக்களை அடக்கி நசுக்கிய ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் ஆட்சியை கையில் கொடுக்கப்போகின்றீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். 

ஜனாதிபதி தேர்தல் நாள் நெருங்கிவருகின்றது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றால் போல் கூறி வருகின்றனர். எனினும் எமது கையில் இருக்கும் பாரிய ஆயுதம் எமது வாக்குரிமையாகும். எவரும் அதனை பறித்துவிட முடியாது. வாக்குரிமையை பயன்படுத்த வேண்டாம் என கூற எவருக்கும் உரிமையும் கிடையாது. எமது வாக்கென்ற ஆயுதத்தை பயன்படுத்தாது விட்ட அன்றைய சந்தர்ப்பத்தில் எம்மத்தியில் மாற்று வழியொன்று இருந்தது. எமது கையில் ஆயுதம் இருந்தது. 

அன்று  வாக்களிக்க வேண்டாம் என எடுத்த தீர்மானம் சரியானதா தவறானதா என்பது வேறு விடயம். ஆனால் மாற்றுவழி இருந்தது. ஆயுத போராட்டம் மூலமாக உரிமைகளை பெறலாம் என்ற மாற்று வழிமுறை முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்று அவ்வாறான மாற்றுவழி இல்லை. இனியும் அவ்வாறு  ஒரு வழிமுறை வரப்போவதும் சாத்தியமில்லை. ஆகவே சரியான ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது கூறினார்.