Hot News
Home » தற்போதைய செய்திகள் » அரசியல் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமெரிக்கா

அரசியல் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமெரிக்கா

நாட்டின் போட்டித்தன்மையை அதிகரிக்க குறிப்பாக பிராந்திய உறவுகளை வலுப்படுத்த, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை நிலைநாட்ட இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.எஸ்.இ. சர்வதேச மகளிர் மாநாட்டில் பேசிய தூதுவர், வலுவான மற்றும் இறையாண்மை கொண்ட இலங்கைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என வாழ்த்துச் செய்தியை டுவிட்டர் மூலம் தெரிவித்தேன்.

இதற்க்கு பதிலளித்த ஜனாதிபதி, உள்நாட்டு முதலீடுகள் உட்பட , பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகள், இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மையமாகக் கொண்ட உறவுகளை வலுப்படுத்த தயாராக இருப்பதாக கூறினார்.

அமெரிக்கா இலங்கைக்கான சிறந்த ஏற்றுமதி சந்தையாகும், மேலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக உள்ளன. இலங்கையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நிலையான மற்றும் சமமான பொருளாதார வளர்ச்சி அவசியம்.

மேலும் உண்மையான வாய்ப்புகளை உருவாக்கும் முதலீடுகள், பரஸ்பர வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு என்பன நாட்டுக்கு அதிக வளர்ச்சியைக் கொடுக்கும். எவ்வாறாயினும், துரித வளர்ச்சி, பரந்த உறவு, நிலையான கொள்கை, நிலையான அரசியல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பொறுத்தே அவை அமையும்.

இவை கூட்டாச்சி, ஒழுங்குமுறை நிலைத்தன்மை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன, இது இலங்கையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும்” என தூதுவர் கூறினார்.