Hot News
Home » செய்திகள் » அமெரிக்காவின் தடை தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் வெற்றி – கூட்டமைப்பு

அமெரிக்காவின் தடை தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் வெற்றி – கூட்டமைப்பு

இராணுவ தளதிபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காகப் பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக நாம் காண்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கான ஆதாரங்களின் அடிப்படையில்  58 ஆவது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த சவேந்திர சில்வா பொறுப்பு கூற வேண்டியவராக இருக்கின்றார்.

யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த  இலங்கை அரசாங்கத்தின் கண்களை  இத்தடை திறக்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு  இடங்கொடுக்க வேண்டும்’ என குறித்த அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.