Hot News
Home » செய்திகள் » இலங்கைக்கு உலக வங்கியால் 128 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி!

இலங்கைக்கு உலக வங்கியால் 128 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி!

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீள் எழுவதற்கான உடனடி உதவியாக குறித்த தொகை வழங்கப்படுகிறது.

குறித்த நிதி வழங்கலில், மீள் கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக்காக உலக வங்கியூடாக வழங்கப்படும் சர்வதேச வங்கிகளின் கடன்தொகை 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைப்பினால் வழங்கப்படும் 93.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் உள்நாட்டு மருத்துவ சேவைகள் நிறுவனம் ஆகியவை இணைந்து ஐக்கிய நாடுகள் அமையத்தின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக உலக வாங்கி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கண்டு பிடிக்கவும் அதனை தடுக்கவும் அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த செயற்றிட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான இயக்குனர், “உலக வங்கியானது கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள இலங்கையுடன் இணைந்து பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் எதிர்கால சுகாதார அவசர நிலைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் இலங்கைக்கு கைகொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “அதி தீவிரமாக பரவி வரும் குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இலங்கை ஏற்கனவே பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் எமது ஆதரவு எதிர்கால அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் இலங்கையின் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய உதவும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த செயற்றிட்டத்தின் மூலம் இலங்கை அவசர நிலைகளை சமாளித்துக்கொள்ளும் விடயத்தில் முன்னேற்றமடையும் எனவும், இலங்கை தேசிய தோற்று நோயியல் மையம் போன்ற மையங்களை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.