Hot News
Home » செய்திகள் » பிரபாகரனிடம் கூறுமாறு சந்திரிகா இரகசியமாக சொன்னவை: மனோ கணேசன் வெளியிடும் தகவல்!

பிரபாகரனிடம் கூறுமாறு சந்திரிகா இரகசியமாக சொன்னவை: மனோ கணேசன் வெளியிடும் தகவல்!

2003ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தின் முக்கிய 3 அமைச்சுக்களை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பறித்ததன் பின்னரான சில சுவாரஸ்ய தகவல்களை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அந்த நடவடிக்கையால் புலிகள் கவலையடைய தேவையில்லையென பிரபாகரனிடம் சொல்லுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பதிவு-

2003 ஆம் ஆண்டு. ஜனாதிபதி சந்திரிகா, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட மூன்று பிரதான அமைச்சுக்களை பறித்தெடுத்தார்.

அதன் பின் ஒரு நாள், தற்போதைய பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண என்னை தொடர்புகொண்டார். நானும், லசந்தவும், மேல் மாகாண சபையில் இருந்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். அதே போல அந்நேரம் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்.

“ஜனாதிபதி உங்களை சந்திக்க விரும்புகின்றார். அதற்கொரு விசேட காரணம் இருக்கின்றது. அவரை சந்திக்க முடியுமா?” என்று லசந்த என்னிடம் கேட்டார். அதற்கு நான் உடனடியாக பதில் சொல்லவில்லை..!

நான் உடனடியாக பதில் சொல்லாததற்கு காரணம் இருந்தது. அப்போது நான் இருந்த ரணில் தலைமையிலான, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சுக்களை பறித்தெடுத்ததினால் எமக்கு சந்திரிகா எதிரியாக தெரிந்தார். இதுவே எனது தயக்கத்திற்கு காரணமாக இருந்தது.

ஆனாலும் லசந்த விடவில்லை. எனது சகோதரர் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்து, சந்திரிகா என்னை சந்திக்க விரும்பும் காரணத்தை பற்றி பேச தொடங்கினார்.
அவ்வேளையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தது. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அரசாங்கமும், புலிகளும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

அது, பல தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் கிளிநொச்சிக்கு யாத்திரை சென்று திரும்பி வந்து அது பற்றி உரக்க பேசிக்கொண்டிருந்த காலம்.

பிரதமர் ரணிலின் புலிகள் உடனான சமாதான செயற்பாட்டுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, விமல் வீரவன்சவின் வழிகாட்டலை கேட்டு, ஜனாதிபதி சந்திரிகா தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பிரதான அமைச்சுக்களை பறித்தெடுத்து, எமது அரசாங்கத்தை கலவரம் அடைய செய்திருந்தார்.

எல்.டி.டி.ஈ அமைப்பும் இதனால் கவலையும், கலவரமும் அடைந்திருந்தது. அவர்களுக்கும் தங்களது பிரதிபலிப்பை தென்னிலங்கைக்கு தெரிவிப்பதற்கு தேவை இருந்தது.

அப்பொழுது இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டைமானும், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரையும் சந்திப்பிற்காக கிளிநொச்சிக்கு வரும்படி புலிகள் அழைத்திருந்தார்கள்.

அவ்வேளையில் நான் எமது அரசாங்கத்தில் அமைச்சர் அல்ல. புலிகளின் இந்த அழைப்பு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற வகையிலே எனக்கும் கிடைத்தது.

இந்த அழைப்புகளை அவர்கள் இரகசியமாக அனுப்பவில்லை. அதே போல் செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்து பகிரங்கமாகவும் செய்யவில்லை. ஏனென்றால் அன்றைய சமாதான காலத்திலே புலிகளின் அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் சட்ட விரோதமான காரியங்கள் அல்ல. ஆனாலும் அவற்றுக்கு பின்னாலே ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் இருந்தது.

கிளிநொச்சி சமாதான செயலகத்தில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு, நமது நாட்டின் திறமை வாய்ந்த உளவுத்துறையின் மூலமாக ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் தெரிந்திருந்தது.

லசந்த அழகியவண்ண என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த போது அவரது தொலைபேசியூடாக சந்திரிகா வந்தார். லசந்த தொலைபேசியை என்னிடம் கொடுத்தார்..!

“மனோ, நீங்கள் பிரபாகரனை சந்திக்கிறீர்கள் தானே?” எனக்கேட்டார்!

அந்த கேள்வியால் நான் அதிர்ச்சியடைவேன் என்று அவர் நினைத்தாரோ தெரியவில்லை. இருப்பினும் நான் அவருக்கு அமைதியாக பதில் கூறினேன்.

“நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ள ஜனாதிபதிக்கு தெரியாமல் எதுவும் நடைபெற முடியாதல்லவா? என்னையும் அழைத்துள்ளார்கள். இருப்பினும் நான் அதுபற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை.” என்றேன்!

“இல்லை, இல்லை. நீங்கள் போய் பிரபாகரனை சந்திக்க வேண்டும்.” என்றார் ஜனாதிபதி சந்திரிகா.

“அரசாங்கத்தின் அமைச்சர்களான ஆறுமுகமும், சந்திரசேகரனும் கூட பிரபாகரனை சந்திக்கின்றார்கள்.” என மேலும் சந்திரிக்கா கூறினார்.

தொடர்ந்து கூறினார், “பிரபாகரனுக்கு கொடுக்க வேண்டிய செய்தி ஒன்று என்னிடம் உள்ளது. அதை எடுத்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள்” என்றார்.
“ஏன் அமைச்சர் சந்திரசேகரனிடமோ, ஆறுமுகத்திடமோ, கொடுத்தனுப்புங்களே!” என்றேன்.

“இல்லை, அந்த செய்தியை ஆறுமுகத்திடமோ, சந்திரசேகரனிடமோ கொடுத்தனுப்ப நான் விரும்பவில்லை.” என்று அவர் தொடர்ந்து கூறிக்கொண்டே போனார்.

“சரி, நாட்டின் தலைவி சொல்வதானால், நான் அதை செய்கிறேன்!” என்று அவரிடம் கூறிவிட்டு கிளிநொச்சி பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்தேன்.

ஆனால் எனது அந்த தீர்மானமும், பிரபாகரனுடனான சந்திப்பும், பிற்காலத்தில் இதே சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரான விமல் வீரவன்ச போன்றோர்களால் எனக்கெதிராக சிங்கள மக்களை தூண்டிவிட பயன்படுத்தப்படும் என நான் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை.

“புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தியுங்கள்” என நாட்டின் ஜனாதிபதியாக இருந்துகொண்டு என்னை வலியுறுத்திய சந்திரிகா பண்டாரநாயக்கவும், அந்த சிங்கள பௌத்த இனவாத தாக்குதல்களில் இருந்து என்னை காப்பாற்ற முன்வரவும் இல்லை. “நான்தான் மனோவை போக சொன்னேன்” என்று பகிரங்கமாக சந்திரிகா கூறவும் இல்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது அவர் இந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவார்.

அந்த நாளும் வந்தது. கிளிநொச்சிக்கு நான் புலிகளின் தலைவரை சந்திப்பதற்கு செல்ல தீர்மானித்த நாள். அன்று அதிகாலை மூன்று மணிக்கு முன்னேற்பாடு செய்ததன்படி, ஜனாதிபதி சந்திரிகா தொலைபேசியில் என்னை அழைத்து சொன்னார்.

“மனோ, பிரபாகரனுக்கு சொல்லுங்கள்.

“தென்னிலங்கையில் எமது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை மத்தியிலான அரசியல் போட்டா போட்டிகள் தொடர்பில் புலிகள் கலவரம் அடைய தேவையில்லை. இது எமது அரசியல்”

“சமாதான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நான் ரணிலின் அமைச்சுக்களை பறிக்கவில்லை. அதே போல் சர்வதேச இடைத்தரகர் நோர்வே அரசாங்கத்தை நான் தான் இந்நாட்டுக்கு முதன் முலில் அறிமுகப்படுத்தினேன்”

“எனவே நோர்வே தலையீட்டுடன் சமாதான செயற்பாட்டை தொடர்ந்தும் புலிகளுடன் முன்னெடுக்க நான் விரும்புகிறேன். இதை பிரபாகரனிடம் கூறுங்கள்.” என்றார்.
உண்மையிலேயே அந்த அதிகாலை அமைதியில் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏனென்றால், ரணில் அரசாங்கத்தின் சமாதான நடவடிக்கை பிழையானது என்று கூறித்தான் ஜனாதிபதி சந்திரிகா, ரணில் அரசாங்கத்தின் அமைச்சுகளை பறித்தெடுத்தார் என்று வெளிப்படையாக கூறப்பட்டது.

சந்திரிகாவுடன் நெருக்கமாக அன்று செயற்பட்ட ஜேவீபீ இந்த காரணத்தை நாடு பூராகவும் சென்று கூறியது. ஜேவீபீயின் அந்த இனவாத பிரச்சாரத்திற்கு அன்று ஜேவீபீயில் இருந்த விமல் வீரவன்ச தலைமை தாங்கினார்.

ஆகவே இப்படி புலிகள் உடன் பேசுகின்றீர்கள் என்று கூறி ரணில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டுவிட்டு, அதே சமாதான செயற்பாட்டை முன்னெடுத்து புலிகளுடன் பேச தயார் என்று ஜனாதிபதி சந்திரிகா கூறுவதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது வியப்பில்லை தானே?

அவ்வேளையில் தான் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா, புலிகளில் இருந்து விலகி, சண்டையிட்டு தலைமறைவாக இருந்தார். அவர் அவ்வேளையில் கொழும்புக்கு இரகசியமாக வந்து ஒளிந்திருக்கின்றார் என்ற செய்தியும் நாட்டில் பரவி இருந்தது.
இதையிட்டும் சந்திரிகா பிரபாகரனிடம் ஒரு விடயத்தை சொல்லும்படி கூறினார்.
“கருணா அம்மான் வெளியில் வந்து அகதியாக என்னிடம் சரண் அடைந்தால், நாட்டின் தலைவி என்ற முறையிலே அவருக்கு நான் அடைக்கலம் கொடுக்க வேண்டி வரும். அவ்வாறு நடந்தால் அது புலிகளுக்கு எதிரான செயற்பாடு என நினைக்க வேண்டாம் என பிரபாகரனிடம் கூறுங்கள்”

“அதே போல் நாளை பிரபாகரனே கொழும்புக்கு வந்து என்னிடம் அடைக்கலம் கோரினாலும், நாட்டின் தலைவி என்ற முறையிலே நான் அவரை வரவேற்பேன் என்றும் கூறுங்கள்” என்று சந்திரிகா கூறி முடித்தார்.

அந்த உரையாடலின் பின் சந்திரிகா மீது எனக்கு புதிய அபிப்பிராயம் ஏற்பட்டது.
அவரது கணவர் விஜயகுமாரதுங்கவை எனது தந்தை வீ.பீ.கணேசன் மூலமாக நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். அவர்கள் இலங்கை சினிமா நண்பர்கள். ஒரே திரைக்கதையில், தமிழில் வீபியும், சிங்களத்தில் விஜேயும் நடித்திருந்தார்கள். டைரக்சன், யசபாலித்த நாணயக்கார. அவர் வாசுதேவவின் சகோதரர்.
இதிலிருந்தே, எனக்கு அரசியல் ரீதியாக சந்திரிக்காவுடன் நெருக்கம் ஏற்பட்டது என்று கூற வேண்டும்.

இந்த நாட்டின் தலைமைக்கு தெரிவான சிங்கள அரச தலைவர்களில் சந்திரிகாதான் இனவாதம் குறைந்த தீர்மானமெடுக்கும் தலைவர் என இன்னமும் நான் நம்புகின்றேன்.

ஆனால், அரசியல் இலாபம்தான், இவர்கள் எல்லோரினதும் முதல் தேவை. அப்புறம்தான் நாடு, இனம், நல்லிணக்கம் எல்லாமே.

இல்லாவிட்டால், புலிகளுடன் பேசுகிறார் எனக்கூறி ரணிலின் அரசை கலைத்திருக்க மாட்டாரே. பிறகு அதே புலிகளுடன் தானும் அதே பேச்சுவார்த்தைக்கு தயாராக மாட்டாரே.

பிற்கால சமீபத்தில், அன்றைய ஜனாதிபதி சந்திரிகா, எனது அமைச்சின் கீழ் இருந்த “நல்லிணக்க காரியாலயத்தின்” தவிசாளராக இருந்தார். அதாவது, அவரது நேரடி அமைச்சர் நான்.

அவரது அன்றைய வழிகாட்டி விமல் வீரவன்ச, சந்திரிகாவை பச்சையாக வெட்டி சாப்பிட விரும்பும் கும்பலில் இருக்கிறார். அங்கேதான் சந்திரிகாவின் நெருங்கிய நம்பிக்கை லசந்தவும் உள்ளார்.

இன்று பிரபாகரனும் இல்லை

“காலம், காலம் மாறும்…” என்ற இன்று நான் அடிக்கடி கேட்கும் காதல் கப்பல் பாடல் ஆரம்ப வரிகள்தான் ஞாபகம் வருகின்றன.

அப்புறம், நான் கிளிநொச்சி சென்று புலிகளின் தலைவர் பிரபாவை சந்தித்தேன். மிக சுவாரசியமான உரையாடல். அதுபற்றி இப்போதல்ல, அப்புறம் பேசுவோம்.

Author: TELO Admin