Hot News
Home » செய்திகள் » சுவிஸ் கிளையின் அனுசரணையுடன் மறைந்தவர்களை மலரச் செய்யும் நிகழ்வு

சுவிஸ் கிளையின் அனுசரணையுடன் மறைந்தவர்களை மலரச் செய்யும் நிகழ்வு

கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் தலைமை தாங்கி வீரமரணம் அடைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தளபதி “மிசோராம்” என்று அழைக்கப்படும் ஞானேஸ்வரன் உட்பட்ட 9 போராளிகளுடைய நினைவு தினம் 26.05.20 அன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள தாழ்வுபாடு என்ற கிராமத்தில் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டு சுவிஸ் கிளை நிதி பங்களிப்பின் ஊடாக 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த தாக்குதலில் மறைந்த 9 வீரமறவர்களுக்கு அஞ்சலி.

1985 ஆம் ஆண்டு இற்றைக்கு 35 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த வீர காவியத்தை நினைவு கூறி, பெருமிதம் அடைகிறோம்.

இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த தளபதி “மிசோராம்” என்ற ஞானேஸ்வரன், “பவா” என்ற ரவீந்திரநாதன், (கட்டைபிராய்) “வீனஸ்” என்ற அன்டன், “பரன்” என்ற மனோகரன், “ரவி” என்ற செல்வலிங்கம், “குமார்”, “அஜித்” என்ற விக்னேஸ்வரன், பாலசிங்கம் மற்றும் “ஜெராட்” என்று அழைக்கப்படும் அத்தனை தோழர்களுக்கும் எங்களுடைய அஞ்சலிகளை செலுத்துகிறோம். தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீரகாவியத்தின் ஒரு சில துளிகள் பின்வருமாறு அமைந்தது.

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பாரிய தாக்கத்தினையும் புதிய பரிமாணத்தினையும் ஏற்படுத்திய “கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை” தலைமை தாங்கி நடத்திய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தளபதி “மிசோராம்” என்று அழைக்கப்படும் ஞானேஸ்வரன் உட்பட்ட, அவரோடு உயிர்நீத்த வீரமறவர்கள், அதுவரை வாகனத்தில் இராணுவ முகாமை விட்டு வெளியே சென்று திரும்பும் இராணுவத்தை மட்டும் பதுங்கியிருந்து தாக்கிவிட்டு விட்டு ஓடித் தப்புகின்ற “கெரில்லா போர் முறை” போராட்டமாக இருந்த எமது போராட்ட முறை, “மரபுவழி போர்” முறை மூலம் மரபு வழி இராணுவமாக மாற்றம் பெற்று, இராணுவ முகாமை சுற்றி வளைத்து தேடி சென்று தாக்குகின்ற முதல் பரிமாணத்தை ஏற்படுத்தினார்கள்.

விடுதலை போராட்டத்திற்கு செல்பவர்கள் வெல்வார்கள் ஆனால் திரும்பி வருவதில்லை என்ற பொன்மொழியை உண்மையாக்கிய வீரமறவர்களை நாம் நினைவு கூருவதில் பெருமிதம் அடைகின்றோம்.

“போர் என்றால் போர்” என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்த ஜே. ஆர். ஜெயவர்தன அவர்களின் அரசாங்கம், ஜே. ஆர். ஜெயவர்தன, லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க சிறில் மத்தியூ போன்ற பேரினவாதிப் பலவான்கள் எக்காளமிட்டு கொண்டிருந்த வேளையில், அவர்கள் எல்லோரையும் நிலை குலைய வைத்தது இந்த பாரிய தாக்குதல். ஆசிய கண்டத்திலே, வியட்நாம் யுத்தத்திற்கு பின்னர், மிகப்பெரிய ஒரு தாக்குதலாக, பாரிய அதிர்வலைகளை இலங்கை நாடு முழுவதும் பரப்பியது. மிக வீரம் செறிந்த தாக்குதலாக இது வரலாற்றிலே பதிவு செய்யப் பட்டிருக்கின்றது.

காரை நகர் தந்த செம்மல் “மிசோ” என்ற ஞானேஸ்வரன் போற்றப்பட வேண்டியவர். தமிழ் ஈழ விடுதலை போராட்டத்திலே காரை நகரின் பங்கு மறுக்க முடியாததும் மறைக்க முடியாததுமான ஒன்றாகும். காரை நகரில் பிறந்த அனைவரும் பெருமிதம் கொள்ளும் வகையிலே மிக சிறந்தவொரு போராட்ட பரிமாணத்தை “மிசோராம்” என்கிற தளபதியின் தலைமையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 1985 ஆம் ஆண்டு உலக அரங்கிலே அரங்கேற்றிக் காட்டியது.

அதன் விளைவு பின்பு பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியதோடு, நாம் கோரிக்கை வைத்த வடக்கு கிழக்கு இணைந்த காணி மற்றும் போலீஸ் அதிகாரம் உட்பட்ட ஒரு மாநில அலகை தமிழர்களுக்கு வழங்குவதற்கான ஒப்புதலுக்கு வருவதற்கு அடிகோலியது.

திம்பு பேச்சுவார்த்தையில் “பயங்கரவாதிகள்” என்று அழைத்த எம்மை “விடுதலைப் போராளிகள்” என்று அழைத்து சமமாக மேசையில் அமர்த்தி, இலங்கை அரசாங்கம் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தது. மிகப் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வீர காவியம், எக்காளமிட்ட ஜே . ஆர். ஜெயவர்தனவின் மனதிலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இந்த சூழ்நிலையில், இலங்கையில் ஈழத்தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், இராணுவ முகாம்களை தேடி வந்து தாக்க போகிறார்கள் என்ற அச்சம் அவர்களின் மனதிலே கிலியை குடிகொள்ள செய்தது. அப்படிப்பட்ட வீரம் செறிந்த ஒரு தாக்குதலான இந்த நிகழ்வே, இன்று அரசியல் யாப்பிலே எழுதப்பட்டிருக்கின்ற தீர்வுத்திட்டம் உருவாகுவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் சமமாக போராளிகளை மேசையில் அமர வைத்து, பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கும் அடிகோலியது என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கோட்டையாக திகழ்கின்ற காரை நகர், இன்று வரை பிரதேச சபை கூட, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கைகளில் தான் தொடர்ந்தும் இருக்கிறது என்றால், அது எமது இயக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற மாபெரும் ஆதரவு என்றே கூற வேண்டும். காரை மைந்தர்களுக்கே ஒப்பான தன்னொழுக்கம், கடும் முயற்சி, தீவிர செயற்பாடு என்ற குணாம்சங்களை கொண்டவர்தான் “மிசோராம்” என்கிற மாவீரன். மாபெரும் தளபதி. இவர் கரங்களில் வளர்ந்த போராளிகளில் பலர் இயக்கத்தில் மிக செம்மையான முறையிலே வளர்க்கப் பட்டவர்களாவர்.

INFO: TELO SWISS BRANCH
26.05.2020
ஞானம்.

Author: TELO Admin