Hot News
Home » செய்திகள் » இனவாதத்திற்கு எதிரான அமெரிக்கர்களின் எதிர்ப்பு உலகம் முழுவதும் வியாபிக்கும் சாத்தியம்

இனவாதத்திற்கு எதிரான அமெரிக்கர்களின் எதிர்ப்பு உலகம் முழுவதும் வியாபிக்கும் சாத்தியம்

George Floyd-இன் கொலைக்கு எதிரான போராட்டங்கள் 8ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றன.

பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அமெரிக்க நிர்வாகம் கோரியுள்ளது. எனினும், போராட்டக்காரர்கள் நீதி கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் 23 மாநிலங்களின் 45 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அது வார்த்தை அளவிலேயே உள்ளது.

பெருந்திரளாக ஒன்றிணையும் மக்கள் நியூயோர்க்கிலும் வொஷிங்டனிலும் ஏனைய மாநிலங்களிலும் திரண்டு வெவ்வேறு பாணிகளில் நீதி கோரி முன்நகர்கின்றனர்.

George Floyd-இன் கொடூரக் கொலையினால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சூழலை வேண்டியே முன்னெடுக்கப்படுகின்றது.

எழுச்சியடைந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், சென்.லூசியா நகரின் அடகு வைக்கும் நிலையமொன்றில் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி அஞ்சலி செலுத்தியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறுப்புணர்வு, போராட்டம், அமைதியின்மை நிலவுகின்ற சூழலில், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அன்பு மற்றும் கருணையின் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

George Floyd-இன் மரணத்தின் பின்னர் நான் மிகுந்த கவனத்துடன் இந்த சமூகத்தின் கொந்தளிப்பு தொடர்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். எனது அன்புக்குரிய நண்பர்களே, நாம் இது குறித்து இனிமேலும் குருடர்களாக இருக்கக்கூடாது. அதேவேளை, வன்முறைகள் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற முடியாது. இதனூடாக கிடைப்பதைவிட இழப்புகளே அதிகமாகும்

என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஓலின்ஸ் பகுதி பொலிஸார் மண்டியிட்டு போராட்டக்காரர்களிடம் சமரசத்தை வெளிப்படுத்தியதுடன், டென்னஸி மற்றும் ஏனைய நகரங்களில் அமெரிக்க பாதுகாப்பு படையினரும் மண்டியிட்டு தமது சகோதரத்துவ உணர்வை போராட்டக்காரர்களுக்கு வௌிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, 6 வயது குழந்தையின் தாயான, George Floyd-இன் மனைவி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை உணர்வுபூர்வமாக நடத்தியுள்ளார்.

எனக்கு குழந்தையொன்று உள்ளது. உயிரிழந்த ஜோர்ஜிற்காகவே நான் இவ்விடத்தில் இருக்கிறேன். அவரின் மரணத்திற்கு நீதியும், நியாயமும் வேண்டும்

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகளை முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சாத்வீகப் போராட்டக்காரர்கள், மக்களின் இல்லமான வெள்ளை மாளிகையின் அலுவலர்களால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கலைக்கப்பட்டதன் ஊடாக, ஜனாதிபதி ட்ரம்ப் கொள்கைகளைவிட அதிகாரத்திற்கே பேராசைப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவரால் பொதுமக்களின் இதயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. தமக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினருக்கு மாத்திரமே அவர் உதவுகின்றார். பொதுவாக அனைத்து மக்களையும் ஒரே தரப்பினராகக் கருதி செயற்பட வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும். அவர் புனித ஜோன் தேவாலயத்திற்கு அருகாமையில் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு பக்கத்தையாவது புரட்டி வாசித்திருந்தால் பெரும்பாலானவற்றை புரிந்துகொண்டிருக்கலாம்.

என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மனித நேயத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் கருப்புப் புரட்சி தற்போது எல்லைகளைக் கடந்து வியாபித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் பொலிஸாரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கருப்பின பிரான்ஸ் பிரஜைக்கு நீதிகோரி பெரிஸ் நகரில் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது.

கருப்பினத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு பெத்தலஹேமிலுள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய நாளின் சூர்யோதயம் போராட்ட மேகங்கள் சூழ்ந்துள்ள அமெரிக்காவிற்கு விடிவினைக் கொண்டு வர வேண்டும் என்பதே மனித நேயத்தை யாசிக்கும் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.