Hot News
Home » செய்திகள் » அமெரிக்காவின் துயர நிகழ்வுகள் இலங்கைக்கு பாடமா? இல்லை பாதையா? – சுரேந்திரன்

அமெரிக்காவின் துயர நிகழ்வுகள் இலங்கைக்கு பாடமா? இல்லை பாதையா? – சுரேந்திரன்

அமெரிக்காவின் துயர நிகழ்வுகள் குறித்து யாழ். மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமாகிய திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

‘உலகின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் இனவாதமும் நிறவெறியும் இந்த நவீன யுகத்திலும் தொடர்வது இந்த பூகோளத்தின் சாபக்கேடேயாகும். அதன் விளைவுகளை தற்போது உலக வல்லரசான அமெரிக்கா அனுபவித்து வருகின்றது. இது ஏனைய உலக நாடுகளுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், பொலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்தை முழங்காலினால் நெரித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் எட்டாவது நாளாக தொடர்கின்றன. இதனால் அமெரிக்காவில் நாற்பது நகரங்கள் முடங்கியுள்ளதுடன் பலகோடி பெறுமதியான சொத்துக்களும் நாசமாகியுள்ளது.

நிற பேதத்தின் அடிப்படையில் மோதிக்கொண்ட அமெரிக்கர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்ததுடன், பல பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேற்றப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு சகல அரசியல் உரிமைகளும் சட்டரீதியாக வழங்கப்பட்டு கறுப்பினத்தைச் சார்ந்த பராக் ஒபாமா ஜனாதிபதியாக அமெரிக்காவை இரண்டு தவணைக்காலம் ஆட்சி செய்தும் இன்றுவரை நிறவெறி தொடர்வதும், அதன்காரணமாக இந்த கொரோனா அபாய காலத்திலும் மக்கள் போராட்டங்கள் வெடித்து அது உச்ச பாதுகாப்புடன் இருக்கும் வெள்ளை மாளிகையை மக்கள் முற்றுகையிடும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளமை, இலங்கைபோன்ற நாடுகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்க தூண்டியுள்ளது.

இதன்மூலம் அரசியல் காரணங்களுக்காக அமெரிக்காவில் விதைக்கப்பட்ட நிறவெறி பல தசாப்தங்கள் கடந்தும் அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றமை வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையை பார்க்கும் போது இலங்கை அமெரிக்காவைவிட பல மடங்கு ஆபத்தை நோக்கி செல்லப்போகிறது என்ற அச்சம் எழுந்துள்ளது. அபிவிருத்தி மூலம் இனப் பிரச்சினைகளை தீர்க்கலாம் அல்லது மழுங்கடிக்கலாம் என்ற இலங்கை அரச தலைவர்களின் கோட்பாடு பொய்யானது என்பதை நிரூபித்துள்ளது அமெரிக்கப் பிரச்சினை.

அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ, தழிழ் மக்களுக்கு உரிமை தேவை இல்லை, தலைவர்களுக்கே தேவை என்ற தொனிப்பட கூறிவரும் கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை அமெரிக்க நிகழ்வுகள் நிரூபித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்துக்களை கூறமுடியாத திரிசங்கு நிலையில் இலங்கை உள்ளமை எமது நாட்டின் ஜனநாயகத் தோல்வியேயாகும். இங்கு பூர்வீகக் குடிகளான தமிழ் தேசிய இன மக்களையே இன ரீதியாக வஞ்சிக்கும் அரசு அமெரிக்காவில் நிற ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் பற்றி பேசுவதற்கு என்ன தார்மீகம் உள்ளது? என்ற கேள்வி முன்நிற்கின்றது.

சில குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் தேர்தல் வெற்றிக்காகவும் இலங்கையில் மிக தாராளமாக இனவாதம் விதைக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தற்போதைய ஆட்சியாளர்கள் அளவுக்கதிகமாக இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்ப்பதில் அக்கறை காட்டி வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகளாலும் போதனைகளாலும் இனவாதம் அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டு வருவதுடன், மாநகரம் முதல் குக்கிராமம் வரை இதற்கு இசைவாக்கம் அடைந்துள்ளது.

இவ்வாறான நிலை தொடர்வதனால் இன்று இனவாதத்தை பரப்பும் அரசியல்வாதிகளே நினைத்தாலும் மக்களை இனவாதத்திலிருந்து மீட்டு இன நல்லிணக்கத்தை நோக்கி கொண்டுசெல்ல முடியாது. இந்த போக்கு இலங்கையின் வளர்ச்சியையும் அமைதியையும் தொடர்ந்து பாதிக்கும். இலங்கையை பொறுத்தவரைக்கும் இனவாதம் தற்போது தலைவரைக்கும் வெள்ளம் வந்த நிலையில் உள்ளது. தலைக்குமேல் வெள்ளம் வருவதற்கு முன் தடுத்தால் சில வேளை மீள வாய்ப்பிருக்கலாம். தவறின் இந்த நாடு இனவாத தீயினால் எரிந்து நாசமாகவேண்டும் என்பதே விதியாக இருக்கலாம் .

ஒரு நாட்டில் அந்த நாட்டினது பூர்வீக குடிகளான தேசிய இனத்தினை அந்த நாட்டினது இராணுவத்தைக் கொண்டு தாக்கி அழித்துவிட்டு, அந்த நாளில் ஒருபுறத்தில் மக்கள் கொல்லப்பட்ட உறவுகளை நினைத்து அஞ்சலிக்க தடைவிதித்துக்கொண்டு, மறுபுறம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அடிப்படையில் அதி அபாய வலயமாக காணப்படும் தலைநகரில் சொந்த மக்களை அழித்ததை வெற்றிவிழாவாக கொண்டாடும் மனநிலையில் உள்ள ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில், சாதாரண பெரும்பான்மையின மக்களின் மனங்களிலும் இனவாதம் தூண்டப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.

முக்கிய விடயங்களை இங்கு கருத்தில் கொள்ளுவது அவசியம். அமெரிக்க கறுப்பினத்தினர் குடியேற்றப் பட்டவர்கள். ஆனால் தமிழினம் இலங்கையின் பூர்வீக குடியினர், தேசிய இனம். அதற்கான சகல தகுதிகளும் உரித்தும் உடையவர். அங்கு கறுப்பினத்தினர்க்கு சகல உரிமைகளும் வழங்கப் பட்டுள்ளன. இங்கு இன, மொழி மற்றும் மத ரீதியாக அரசியல் யாப்பிலேயே ஒரு பூர்வீக குடித் தேசிய இனம் புறந்தள்ளப் பட்டுள்ளது. இன அங்கீகாரத்திற்கான கோரிக்கைகள் மறுக்கப் பட்டு நசுக்கப் பட்டுள்ளன. சுயநிர்ணய உரிமை கோரிக்கை பிரிவினை வாதமாக சித்தரிக்கப் படுகிறது.

நாட்டு மக்களே விரும்பினாலும் ஒரு தமிழர் நாட்டின் தலைவராக தெரிவு செய்ய முடியாத வகையில் அமைந்துள்ளது கடுமையான இனவாதப் போக்கு. அதற்கும் மேலாக, அமெரிக்காவில் குற்றமிழைத்த காவல் துறையினர் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீதி தன் கடமையை செய்துள்ளது. காவல் துறை மண்டியிட்டு மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கையில் நிலமை என்ன? தமிழினத்திற்கு எதிரான குற்றம் புரிந்தோர், நீதி முன் நிறுத்தப் பட்டார்களா? இல்லை, மாறாக பதவி உயர்வுகள் வழங்கப் பட்டு கௌரவிக்கப் படுகிறார்கள். தண்டிக்கப் பட்டோரும் விடுவிக்கப் படுகிறார்கள், தேசிய வீரர்களாக கொண்டாடப் படுகிறார்கள். இந்த துரதிஷ்ட நிலைக்கு ஆட்சியாளர்கள் நாட்டை கொண்டு சென்றுள்ளார்கள். அநீதிக்கு எதிரான விசாரணை மறுக்கப் படுகிறது.

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவரும், தமது சகோதர இனத்தின் போராட்டத்தை ஆதரித்து கரம் கோத்திருக்கிறார்கள். இங்கு தமிழ் மக்களின் தேசிய அடிப்படை உரிமைப் போராட்டத்திலோ, அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகவோ, அல்லது அவர்களது இனப்படுகொலை, மனித உரிமை மீறல், யுத்தக் குற்றம் மீதான விசாரணைகள் என்பவற்றிற்கு ஆதரவாக சகோதர இனமான சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் இன பேதத்தினை கடந்து கைகோர்த்து நிற்பார்கள், அல்லது நிற்பவர்களை அந்த இனம் எந்த அளவு ஏற்று கொள்கிறது என்பது இன்னும் கேள்விக்குறியே. இந்த போக்கினால் பல்லின மக்கள் வாழும் இலங்கைபோன்ற நாடுகளின் எதிர்காலம் பொதுவாக சிந்திக்கும் மிதவாத தலைவர்களின் கைகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், இன்று விதைக்கப்படும் இனவாத விதைகள் விருட்சமாகி அவர்களை சவாலுக்கு உட்படுத்தும்.

தொடர்ச்சியாக பெரும்பான்மையினர் இனவாதத்தை முன்நிறுத்தி தேசிய இனமான தமிழினத்தை ஒடுக்க முற்படும்போது, மக்களை ஒன்றிணைத்து பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முயல்வதை அரச தலைவர்கள் இனவாதமாக சித்தரித்து நாடு முழுவதும் இனவாத கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இது இந்த நாட்டை படு பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் என்பதற்கு தற்கால அமெரிக்க சம்பவம் நல்ல உதாரணமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இன முறுகலால் நிர்ப்பந்திக்கப்பட்ட முப்பது வருடகால யுத்தம் இந்த நாட்டை சின்னாபின்னமாக்கி நாட்டின் வளர்ச்சியை முப்பது வருடங்கள் பின்நோக்கி கொண்டு சென்றுள்ளது. இதை உணராமல் இந்த யுத்தத்தில் பாடங்கற்றுக்கொண்டு, யுத்தத்திற்கு அடிகோலிட்ட காரணிகளை அறிந்தும் சரிசெய்யாமல், அவற்றை பொருட்படுத்தாமல் பயணிக்கும் இலங்கை அரசு அமெரிக்காவிடமிருந்தேனும் பாடம் கற்றுக்கொள்ளுமா? அல்லது இதையும் கடந்து மீழா இன வேற்றுமைத் துயரப் பாதையில் இட்டுச் செல்லுமா?’

என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Author: TELO Admin