Hot News
Home » செய்திகள் » டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

டெலோ தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்! ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதற்காக இணைந்து பயணிக்கிறோம் – வினோ

தமிழீழ விடுதலை இயக்கம் இங்கு தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய மக்கள் பலம் எமக்கு இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக திடசங்கற்பத்துடன் இணைந்து பயணிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா – திருநாவற்குளத்தில் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலய திறப்புவிழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இங்கு பல கட்சிகள் களம் இறக்கப்பட்டிருக்கிறன, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் யாரைத் திருப்திப்படுத்துவதற்காக, யாருடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியாத விடயமல்ல. இதற்குள் இருக்கும் சூட்சுமத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் இனம் உணர்வால் ஒற்றுமைப்பட்டு. ஜனநாயக வழியில் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்காகவே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இன்று மக்களுடன் பயணிக்காதவர்கள், அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுக்காதவர்கள் எல்லாம் மக்களிடம் வருகின்றார்கள்.

போராட்டத்தில் ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள் இன்று களத்திலே நிற்கிறார்கள். இராணுவ அடக்குமுறைகளின் போது ஓடிச்சென்று ஒழிந்தவர்கள் எல்லாம் தாங்கள் புனிதர்களாகவும் படித்து பட்டம் பெற்றவர்கள் என நினைத்துக்கொண்டு அரசியல் செய்வதற்காக இங்கே வந்திருக்கின்றார்கள்.

படித்தவர்களிடம், பட்டம்பெற்றவர்களிடம் இந்த மாகாணசபையை வழங்கியிருந்தோம். ஐந்து வருடங்கள் இந்த மாகாணசபையை படாதபாடுபடுத்தி அது உருவாக்கப்பட்ட நோக்கத்தில் ஒரு துளிகூட நிறைவேறாமல் அந்த மாகாணசபை காலாவதியாகியதை மக்கள் அறிவர்.

அங்கு பல ஊழல்கள் நடந்ததை கூட பத்திரிகைகள் எழுதியது. படித்ததை வைத்துகொண்டு எப்படி ஊழல் செய்யலாம் என்பதை அறிந்தவர்களே அவர்கள். அவர்களை மக்கள் நிராகரிக்கும் காலம் நிச்சயம் வரும்.

நாம் உன்னதமான நோக்கத்திற்காக புறப்பட்டவர்கள் தேர்தல் அரசியலுக்காக புறப்பட்டவர்கள் நாம் அல்ல.

எனவே இந்த தேர்தலில் போராட்டத்திலே இருந்து மக்களின் வலிகளை அறிந்து அரசியல் களத்திலே இருப்பவர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

கூட்டமைப்பு சரியான பாதையிலே செல்கிறது. அவர்களால் சரியாக பயணிக்க முடியாத நிலையிலேயே பிரிந்து சென்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.தமிழீழ விடுதலை இயக்கமாகிய நாம் தனித்து போட்டியிட்டால் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய மக்கள் பலம் எமக்கு இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதன்நோக்கம் நிறைவேற்றப்படும் வரைக்கும் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் திடசங்கற்பத்துடன் இணைந்து பயணிக்கிறோம்.

விடுதலைப்புலி போராளிகளில் ஒருவரையாவது இந்த தேர்தலில் நிறுத்துமாறு நான் கேட்டிருந்தேன். தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதற்கு இணங்கவில்லை. இம்முறை தேசிய பட்டியலிலே கிடைக்கும் முதலாவது ஆசனத்தை விடுதலைப்புலிப் போராளி ஒருவருக்கு வழங்கவேண்டும் என்று பலமான கருத்தை முன்வைத்தேன். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அவர்களிற்கு எதனையும் வழங்காத நிலையிலும் கூட கூட்டமைப்பின் வெற்றிக்கு உழைப்பதற்காக அவர்கள் தயாராக இருப்பதுடன், உழைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள்.

அரசியல் மேடைகளில் அவர்களது தியாகங்களை நாம் மறந்துவிடுகின்றோம். அவர்களிற்குரிய கௌரவத்தை வழங்காமல் தேர்தல் காலத்தில் மட்டும் அவர்களை பற்றி சில தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடான விடயம். எனவே எதிர்வரும் தேர்தல்களில் ஆயுதம் ஏந்தி விடுதலைக்காக போராடிய போராளிகளை அரசியல் அரங்கிலே இறக்குவோம்.அதை கூட்டமைப்பின் எந்த பங்காளிக் கட்சிகள் தடுத்தாலும் அதனை செய்ய முற்சிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Author: TELO Admin