Hot News
Home » செய்திகள் » “தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை ரெலோ தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு. சுரேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை ரெலோ தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு. சுரேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதை சாதித்தது?” என்ற மக்களின் சந்தேகங்களை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்றைய தினம் வெளியான (08 ஆம் நாள், புதன் கிழமை ஆடி, 2020) புதன் தினக்குரல் நாளிதழில் 13 ஆம் பக்கத்தில் வெளியான நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட “நல்லாட்சி அரசிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனை சாதித்தது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் பின்வருமாறு தெளிவு படுத்தியிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னத்தை சாதித்தது என்று பலரும் இதே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியிலும் இது சம்பந்தமான ஒரு தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய நிபந்தனையுடனான ஆதரவிலே, சாதித்த முக்கியமான விடயங்கள் பல இருக்கின்றன. முதலாவதாக தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆணையின் அடிப்படையிலே, தமிழ் மக்களினுடைய நீண்டகால கோரிக்கையாக இருக்கும் உரிமைப் பிரச்சினை, அதற்கான ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்ற விடயத்தையும், இறுதி யுத்தத்தில் எங்கள் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கான தீர்வு ஒன்றை பெற்றுத் தருவது என்பவை முக்கிய காரணிகளாக இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றை வகைப்படுத்தி சொல்லுகின்ற போதிலே, முதலில் பாராளுமன்றத்திலே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை மட்டுப் படுத்தி, நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை கொண்டுவர வேண்டிய ஜனநாயக முன்னெடுப்பு ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு முன்னதாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலே, இதை ஒரு நிபந்தனையாக விதித்து, ஆதரவளித்து, ஜனாதிபதி வெற்றி பெற்றவுடன், 19 ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்து, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழித்துக் கட்டி, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, அந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்து, வெற்றி கண்டது. இது தமிழ் மக்களின் மீது ஜனாதிபதி தான் தோன்றித் தனமான விடயங்களை கட்டவிழ்த்து விட முடியாத அளவிற்கு ஒரு கட்டுப்பாட்டினை, ஒரு ஜனநாயக தன்மையை பேணுவதற்கு உதவியது.

இரண்டாவதாக, தமிழ் மக்களினுடைய உரிமைப் பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தது. ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னராக வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஆதரவின் அடிப்படையிலும், இலங்கை பாராளுமன்றத்தை ஒரு அரசியல் சாசன சீர்திருத்த சபையாக மாற்றி, தமிழ் மக்களுடைய உரிமைக்கான அதிகாரப் பரவலுடன் கூடிய கிட்டத்தட்ட சமஷ்டிக்கு ஒப்பானது என்று சொல்லப்படுகின்ற ஒரு அரசியல் தீர்வு திட்டத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஓரளவு அது வெற்றியும் அளித்திருக்கிறது.

பாராளுமன்றத்திலே அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளுடைய பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கிய இந்த சபை அந்த தீர்வு திட்டத்திலே அவர்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி ஒரு அரசியல் சாசன திட்ட வரைபு ஒன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, வாத, பிரதி வாதங்களுக்கு பின்னர், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டு, நிபுணர்கள் அவற்றிலே சில திருத்தங்களையும், வரைபுகளையும், வரையறைகளையும் மேற்கொண்டு, அதுவும் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டு, வாத, பிரதி வாதங்களுக்கு பின்னர், இனி இதை வாக்கெடுப்பிற்கு விடலாம் என்ற நிலை வரைக்கும் அது ஒரு முன்னேற்றத்தை கண்டிருக்கிறது.

தமிழர்களை பொறுத்த வரையிலே, இது தமிழர்களுக்கான முற்று முழுதான தீர்வாக ரெலோ ஏற்றுக் கொள்ளவில்லை. இதை நாங்கள் நிராகரித்திருந்தாலும், எதிர்க்கவில்லை. ஏதோ ஒரு தளத்திலே, எங்களுடைய பிரச்சினைகளை கொண்டு வந்து விடுவதற்கும், அதுவும் உத்தியோகபூர்வமாக அரசியல் யாப்பிலே கொண்டு வந்து நிறுத்துவதற்கு சாலச் சிறந்தது என்ற வகையிலே, இதை நாங்கள் ஒரு காத்திரமான முன்னேற்றமாக கருதுகிறோம். இதில் முற்றுப்பெறாத விடயங்களுக்காக, தொடர்ந்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனது முயற்சிகளை மேற்கொள்ளும். அவற்றை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தது சகலரும் அறிந்ததே.

மூன்றாவதாக, எங்கள் மக்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல், எங்கள் மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட யுத்த குற்ற மீறல்கள், பல்லாயிரக்கணக்கான கொலை செய்யப்பட்ட எங்களுடைய மக்களுக்கான நீதி, பல்லாயிரக்கணக்கான வலிந்து காணாமலாக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான நீதி என்பவற்றிற்காக சர்வதேச அரங்கிலே நாங்கள் நீதி கேட்டு நின்ற வேளையிலே, மனித உரிமைகள் ஆணையம் இலங்கையிலே அப்போதிருந்த அரசாங்கத்தினாலே மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகளிலே ஈடுபட்ட இராணுவம், யுத்த குற்றங்கள் புரிந்திருக்கின்றார்கள்,

தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது, இது சம்பந்தமான ஓரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு பிரேரணையாக நிறைவேற்றி, அதை அவர்கள் மேற்பார்வை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இணை அனுசரணை வழங்குமாறு கோரி நின்றது.

முந்தைய அரசாங்களிலே அது வழங்கப்பட வில்லை. ஆனால் நல்லாட்சி காலத்திலே, இலங்கை அரசாங்கத்தினுடைய வெளிநாட்டு அமைச்சர், மனித உரிமைகளை ஆணையத்திலே, இந்த நடந்த யுத்த குற்றங்களை ஏற்றுகே கொண்டு, யுத்த மீறல்களையும் மனித உரிமை மீறல் குற்றங்களையும் ஏற்றுக் கொண்டு, அந்த பிரேரணைக்கான இணை அனுசரணையை வழங்கியிருந்தார்கள். இது தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய சாதனையே. அதன் பிரகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு பொறிமுறையை, மனித உரிமைகள் ஆணையகம் வரையறுத்து, அந்த பிரேரணையிலே அவர்கள் வழிகாட்டிய விதமாக, இலங்கை அரசாங்கம் ஒரு சட்ட மூலத்தை இயற்றி, அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற வைத்து, காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான அலுவலகங்களை திறந்து, இந்த தரவுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்திருக்கின்றது.

இதற்கும் மேலாக, எங்களுடைய மண்ணிலே நிலை கொண்டிருந்த இராணுவ முகாம்கள், சோதனை சாவடிகளை என்பவற்றை மூடி, இராணுவ பிரசன்னத்தை கணிசமான அளவிலே குறைத்து இராணுவத்தினரை முகாம்களுக்குள்ளே மட்டுப்படுத்தி, தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், ஜனநாயக உரிமைகளை பேணக்கூடிய விதத்திலே சூழலை தோற்றுவித்தது. உதாரணமாக மாவீரர் நினைவேந்தல் நாட்களும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களும் கூட எவ்வித அரசியல் தலையீடுகள், தடங்கல்கள் இல்லாமலும் தமிழ் மக்கள் தங்களுடைய வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கும், உறவுகளுக்குமான அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுகள் கூட, தங்கு தடையின்றி நடைபெறக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது.

அடுத்ததாக பெருமளவு தனியார் காணி, இராணுவம் வசமிருந்தவை, இந்த காலகட்டத்திலே விடுவிக்கப்பட்டன. அதே போன்று, அரசியல் கைதிகளாக இருந்த, தற்போது இருக்கின்ற, 84 பேரை தவிர, ஏனையோர் (216 பேர் அரசியல் கைதிகளில்). அது தமிழ் தேசிய கூட்டமைப்பு சட்ட மா அதிபருடனும், ஜனாதிபதியுடனும் நடத்திய பேச்சு வார்த்தையின் பிரகாரம், (இதில் 84 பேரை தவிர்த்து) மீதியான எல்லோரும் விடுவிக்கப்பட்டார்கள். இது போன்ற பல அரசியல் விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலே, சாதித்திருக்கிறது என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அவர் மேலும் தொடர்ந்த போது, “தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றவில்லை என்பது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி இருப்பதாக பொதுவான கருத்து இருக்கிறது. இது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

நான் மேலே கூறிய விளக்கங்களே சரியான சான்றுகளை பகர்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக கடும் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கக் கூடிய கட்சிகள் இந்த குற்றச் சாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்கள். இதை எந்த உண்மையும் இல்லை. நான் மேலே குறிப்பிட்ட விளக்கத்தின் மூலம் இதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறு என்னவென்றால், ஒவ்வொரு விடயமும் நிறைவேற்றும் போதும் அதை ஒரு பிரச்சாரமாக மக்கள் மத்தியில் எடுத்து செல்லாமை, மக்கள் இட்ட ஆணையை நாங்கள் நிறைவேற்றுகிறோம், ஒரு கடமை என்ற வகையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காத்தது தான், எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டதே தவிர, அதனாலே மக்கள் மத்தியிலே ஒரு குழப்பமான சூழ்நிலை இருப்பது உண்மை.

அது இப்பொழுது கட்டம் கட்டமாக, மக்கள் தெளிவடைந்து வருகிறார்கள். ஊடகங்கள் வாயிலாகவும், மக்களுடனான நேரடி சந்திப்பின் மூலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது என்பதை ஒவ்வொரு உறுப்பினர்களும் தெளிவு படுத்தி வருவதனால், மக்கள் மனதிலே இருந்த அந்த குழப்ப சூழ்நிலை மற்றும் அதிருப்தி இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றது.

என்றும் தெளிவுபடுத்தினார்.

#தமிழ்த்தேசியம் #ஈழத்தமிழர் #சமூகம் #கலாசாரம் #கல்வி #அபிவிருத்தி #தமிழர் #தமிழ் #பண்பாடு #ஒழுக்கம் #மேம்பாடு #இளைஞர் #தலைமுறை #பாராளுமன்றம் #தேர்தல் #தமிழ் #தேசிய #கூட்டமைப்பு #எதிர்காலம்

Author: TELO Admin