Hot News
Home » செய்திகள் » நல்லூரானை வீடுகளிலிருந்து வழிபடுங்கள்: யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் வேண்டுகோள்

நல்லூரானை வீடுகளிலிருந்து வழிபடுங்கள்: யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் வேண்டுகோள்

தற்போதைய சூழலில் அடியவர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசிப்பதை விட வீட்டிலிருந்து வழிபடுவது தான் பொருத்தமானது எனவும், இதற்கு அடியவர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் து. ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லைக் குமரன் மலர்-28 இன் வெளியீட்டு விழா (31) நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் இவ்வருட உற்சவம் ஆரம்பிக்க முதல் ஆலய நிர்வாகமும், நானும், யாழ். மாநகரசபைக் குழுவும் இணைந்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டோம். அப்போதைய சூழலில் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம் செய்து செல்வதில் சுகாதார ரீதியான நெருக்கடிகள் காணப்பட்டது. இந்நிலையில் ஆலயத்திற்கு கூடியளவு அடியவர்களை அனுமதிக்குமாறு ஆலய நிர்வாகம் குறித்த கலந்துரையாடலில் வேண்டிக் கேட்டுக் கொண்டது.

கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்வதால் அவ்வாறான அனுமதியை வழங்குவதற்கு எங்களுடைய வைத்திய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனர்.

வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி என்னால் செயற்பட முடியவில்லை. இந்த நிலையில் தான் மடுமாதா தேவாலயத்திலும், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் அடியவர்கள் திருவிழாக் காலங்களில் அனுமதிக்கப்பட்டது போன்று நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குள்ளும் பெருந் திரளான அடியவர்களை அனுமதிக்குமாறு நான் அவசர அவசரமாக உரிய தரப்பினருக்கு கடிதம் எழுதினேன்.

ஆனால், அந்தக் கடித்ததிற்கான பதில் நேற்று(நேற்று முன்தினம்) தான் கிடைத்தது. என்னால் என்ன செய்ய முடியுமோ? என்கின்றவளவில் அந்தக் கடிதத்தின் பதில் அமைந்துள்ளது.

நான் கடிதங்கள் அனுப்பிய அதிகாரத்திலுள்ள தரப்பினருக்கு இங்குள்ள வைத்திய அதிகாரிகளும் கடிதம் அனுப்பியுள்ளார்கள். நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் பெருந் திரளான அடியவர்கள் வருகை தந்து தரிசிப்பதால் கொரோனா நோய்த் தாக்கம் ஏற்பட்டு விபரீதம் ஏற்படுமென அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்கள்.

எனக்கு நெருக்குவாரங்கள் மேலும் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Author: TELO Admin