Hot News
Home » தற்போதைய செய்திகள் » என் இனிய தமிழ் உறவுகளே!தேசியத்தில் உறுதி, ஆளுமை, இளமை, கல்வியறிவு, மொழித்தேர்ச்சி, உலக அரசியலறிவு, சட்ட அறிவு, ஆகிய பண்புகளைக் கொண்டோரை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுங்கள்

என் இனிய தமிழ் உறவுகளே!தேசியத்தில் உறுதி, ஆளுமை, இளமை, கல்வியறிவு, மொழித்தேர்ச்சி, உலக அரசியலறிவு, சட்ட அறிவு, ஆகிய பண்புகளைக் கொண்டோரை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுங்கள்

என் இனிய தமிழ் உறவுகளே!

தேசியத்தில் உறுதி, ஆளுமை, இளமை, கல்வியறிவு, மொழித்தேர்ச்சி, உலக அரசியலறிவு, சட்ட அறிவு, பொதுநலம், தொடர்பாடல்திறன், விடயங்களை சாதுரியமாக கையாளல், தூரநோக்கு ஆகிய பண்புகளைக் கொண்டோரை தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து, அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற தமிழ் மக்களின் பொதுவான ஆதங்கத்தினை உள்வாங்கி இம்முறை

#தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு_மட்டக்களப்பு_மாவட்ட_வேட்பாளர்களில் #இளைஞர் ஒருவராக #5ம்_இலக்கத்தில் என்னையும் களம் இறக்கியுள்ளனர்.

பொதுவாக அரசியல் என்பது அதிக பணச்செலவு செய்யப்படவேண்டிய , குடும்ப அரசியல் செல்வாக்குள்ள , சுயகௌரவம் பாதிக்கப்படக்கூடியதுமாக இருப்பதால் தகுதியான இளைஞர்கள் அரசியலில் முழுநேரப் பங்காளிகளாக மாறாது அரசியல் விமர்சன பார்வையாளர்களாக மாத்திரமே தங்களை எல்லைப்படுத்திக் கொள்கின்றனர் . இவ்வாறான பாரிய சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்களாகிய நீங்கள் தமிழ் தேசியத்தில் கொண்டுள்ள உணர்விலும் உறுதியான கொள்கையின் அடிப்படையில் உங்கள் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தகமைகளைக் கொண்டுள்ளவன் என்ற நம்பிக்கையிலும் , எதிர்காலத்தில் பொருத்தமான இளைஞர்கள் அனுபவமிக்க தமிழ் அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயலாற்ற தயார்படுத்தும் வகையில் என்னையும் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக நிச்சயம் தெரிவு செய்வீர்கள் என பூரணமாக நம்புகின்றேன் .

தமிழர்களின் மரபுவழி நிலப்பரப்பில் தம்மை தாமே ஆட்சி செய்யும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான மீளப்பெறமுடியா அரசியல் தீர்வாக சுயாட்சி நிர்வாக அலகு ஒன்றை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்கு உறுதியோடும் வெளிப்படைத்தன்மையுடனும் கட்சி தலைமைக்கு வலுச்சேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் .

அதுமாத்திரமின்றி இறுதி இலக்கை அடைவதற்கு தமிழர் தாயகத்தில் எம்மக்களின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததும், பாரிய சவால்கள் நிறைந்ததுமாகும் .

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு குறைவு, பொருளாதார அபிவிருத்தியில் துணிந்து செயற்பட சாதக சூழலின்மை, வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முடியாமை, வேலைவாய்ப்பின்மை , போசாக்கின்மை, பிறப்புவீத வீழ்ச்சி, மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம், போதைவஸ்த்து பாவனை, இளம் குடும்ப விவாகரத்துக்கள் அதிகரிப்பு, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், சுற்றாடல் பிரச்சினைகள், பொது சுகாதாரப் பாதிப்புக்கள், சட்டவிரோத மணல், கனியவள அகழ்வுகள், காடழிப்பு, காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றம், உற்பத்திகளை சந்தைப்படுத்தலில் இடைத்தரகர்களின் சுரண்டல்கள், வசதிகளை வழங்கலில் பாரபட்சம், வளங்கள் சமமாகப் பங்கிடப்படாமை, இன, மத, பிரதேச முரண்பாடுகள் ஆகிய பாரிய சவால்களை வெற்றிகொள்ள, அரசியல் அனுபவசாலிகள், கல்விமான்கள், துறைசார் புலமைசாலிகள், தொழில் விற்பன்னர்கள், மதத்தலைவர்கள் மற்றும் சட்டரீதியான உள்நாட்டு, வெளிநாட்டு அனுசரணைகளுடன் எனது சட்டத்துறை அறிவினையும் அனுபவத்தினையும் முழுமையாகப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்பாண்மையோடு, சனநாயக விழுமியங்களுக்கூடாக செயலாற்ற என் இனிய தமிழ் உறவுகளின் #ஆதரவையும், #ஒத்துழைப்பையும், #ஆலோசனைகளையும் , வழிகாட்டல்களையும் பெருமனதுடன் எதிர்பார்க்கிறேன் .

திரு.ந.கமலதாசன் LLB

Author: TELO Admin