Hot News
Home » செய்திகள் » வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம் – ரெலோ கருணாகரம் (பா.உ,MP)

வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம் – ரெலோ கருணாகரம் (பா.உ,MP)

கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு 79,000 வாக்குகளை பெற்றதுடன் சுமார் 50,000 வாக்குகளை குறைவாக பெற்றிருப்பதென்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் வாக்குச் சரிவாகவே பார்க்கப்படுகிறது என, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மட்டு. மாவட்ட முக்கியஸ்தரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், மட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
மட்டு – அம்பாறை மாவட்ட ஆலயங்களை தரிசித்து வரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம் நேற்று புதன்கிழமை(12) மாலை மண்டூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலய தரிசிப்பை தொடர்ந்து மக்களுடன் அளவளாவும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிட்ட ஏனைய கட்சிகள் மெளன யுத்தத்தை நடாத்தி வெற்றி வாய்ப்புக்கான அறிகுறிகளுடன் தென்படுவதுடன், கூட்டமைப்புக்கான வாக்களிப்பு வீதம் கணிசமாக குறைந்துள்ளது என்பதே உண்மையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் எந்த விதத்திலும் நம்ப முடியாத அளவுக்கு வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் கூட்டமைப்பை விட இரு மடங்கு வாக்குகளை பெற்றிருப்பதென்பது கட்சி மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

1989 இல் தொடங்கிய விகிதாசார தேர்தல் முறையின் ஊடாக 2001 ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2020 ஆண்டிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரு பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

75 வீத தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்மையிலேயே நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைக்கப்பெற வேண்டிய நிலையில் கூட்டமைப்பு சார்பாக இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக ஒருவரும் பொதுஜன பெரமுன சார்பாக ஒருவருமாக நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைத்துள்ளார்கள். இந்த நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகளும் எதிர்காலத்திலே இணைந்து அரசியலுக்கு அப்பால் எமது மாவட்ட அபிவிருத்தி சார் விடயங்களில் இணைந்து செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது.

கடந்த போராட்ட காலங்களில் எமது மாவட்ட மக்களும் மாவட்டமும் அபிவிருத்தியில் பின்தங்கி அந்நியப்பட்டிருப்பதனால் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம். அந்த வகையில் சிரேஷ்ட அரசியலாளர் என்ற ரீதியில் ஏனையவர்களை அரவணைத்து பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது, அந்த கடமையினை செவ்வனே நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறப்பான நேர்த்தியான சேவையாற்றுவதற்கு எண்ணியிருக்கின்றேன்.

இருந்தும் 2020 பாராளுமன்ற தேர்தல் சவால்களை சந்தித்து, கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மண்டூர் கிராம மக்களுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கட்சியை சுய பரிசோதனை செய்யவுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்.

Author: TELO Admin